ஹிந்துக்களுக்கு விரோதமாக அரசு செயல்படுகிறது
ஹிந்து முன்னணி குற்றச்சாட்டுதிண்டுக்கல்: ''ஹிந்து முன்னணி மாநில செயலர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக திண்டுக்கல்லில் மார்ச் 25ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசுப்பிரமணியம் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: அதர்மத்திற்கும், தர்மத்திற்குமான போராட்டம் தற்போது நடக்கிறது. மகாபாரதப் போரின் முடிவைப்போல 2026 ல் ஒரு முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். முழுக்க, முழுக்க ஹிந்துக்களுக்கு விரோதமாக அரசு செயல்படுகிறது. ஹிந்துக்கள் வழிபடுவதற்கு இந்த அரசும், அறநிலையத்துறையும், போலீசும் மறுக்கிறது. வழிபடச் சென்ற ஹிந்து முன்னணி மாநில செயலர் கைது செய்யப்பட்டார். 5 பேரை கைது செய்து குண்டு வைக்கும் பயங்கரவாதிகளைப்போல நடத்தினர். சட்டம் - ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது சிறைச்சாலைகளில் இடமில்லாமல் இருப்பது.இடமில்லாத காரணத்தினால் கடலுார், தேனி என பல மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். அந்தளவுக்கு சிறைச்சாலைகள் நிறைந்துள்ளன. இந்த கைது நடவடிக்கைகளை கண்டித்து மார்ச் 25ல் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என நடக்கிறது. உளவுத்துறை மோசமாக செயல்படுகிறது. தி.மு.க.,வில் உள்ளவர்களே போதைப்பொருட்களை விற்பனை செய்கின்றனர். உளவுத்துறை, போலீசார் என அனைவரும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர் என்றார்.