திண்டுக்கல்: லோக்சபாதேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் 70.99 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. இது 2019 லோக்சபா தேர்தலை விட 6.04 சதவீதம் குறைந்தள்ளது.இதன் மூலம் வெற்றியை கணிக்க முடியாது கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக திலகபாமா, மா.கம்யூ., சச்சிதானந்தம், எஸ்.டி.பி.ஐ., முகமது முபாரக், நாம் தமிழர் கட்சி கயிலை ராஜன் , சுயேட்சைகள் என 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த தொகுதியில் 7,80,074 ஆண், 8,26,759 பெண் , இதரர் 218 என 16,07,051 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஒட்டளிக்க வசதியாக 1812 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பதட்டமான ஓட்டுச்சாவடிகள் 137, மிக பதட்டமான ஓட்டுச்சாவடிகள் 39 என கண்டறியப்பட்டு அங்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சட்டசபை தொகுதி வாரியாக 6 தொகுதிகளில் மகளிர் , மாடல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று தேர்தல் நடந்த நிலையில் காலை 5:30 மணிக்கு மாதிரி ஓட்டுபதிவு நடத்தி இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. இதை தொடர்ந்து 7 :00 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. தொகுதியில் உள்ள 16,07,051 வாக்காளர்களில் 5,57,870 ஆண் , 5,82,874 பெண் , இதரர் 54 பேர் என 11,40,798 பேர் ஓட்டளித்துள்ளனர். ஓட்டு சதவீதம் 70.99 ஆகும். 2019 தேர்தலில் 77.03 சதவீதம் ஓட்டுக்கள் பதிவான நிலையில் நேற்று நடந்த தேர்தலில் 6.04 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது .இதன் மூலம் வெற்றியை கணிக்க முடியாது கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.இதோடு வெளி மாவட்டங்களில் பணிபுரியும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3053 அரசு அலுவலர்கள் , போலீசாருக்கு அஞ்சல் ஓட்டு அனுப்பப்பட்டதில் நேற்று இரவு 7 :00 மணி வரை 2382 தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டன.