உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் ரயில்வே ஸ்ேடஷனுக்கு இல்லை பஸ்கள் பஸ்ஸ்டாண்ட் செல்ல ஆட்டோக்களுக்கு செலவிடும் பயணிகள்

திண்டுக்கல் ரயில்வே ஸ்ேடஷனுக்கு இல்லை பஸ்கள் பஸ்ஸ்டாண்ட் செல்ல ஆட்டோக்களுக்கு செலவிடும் பயணிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்ேடஷனுக்கு பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதால் பஸ்ஸ்டாண்ட் செல்ல பயணிகள் ஆட்டோக்களுக்கு செலவிடும் நிலை தொடர்கிறது .இதை கருத்தில் கொண்டு நத்தம் ரோடு ரயில்வே மேம்பாலத்தின் இடதுபுற பாதை வழியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ்ஸ்டாண்டிலிருந்து அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் 70க்கு மேலான ரயில்கள் செல்கின்றன. இங்கிருந்து வட,தென் மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பயணிகள் பயணிக்கின்றனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கும், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கும் போதிய அரசு பஸ்கள் இல்லை . இதுவும் சில நேரங்களில் வருவதில்லை என்பதால் ரயில்வே ஸ்டேஷன் வரும் பயணிகள் பஸ்ஸ்டாண்ட செல்ல ரூ.100 வரை செலவு செய்து ஆட்டோக்களில் வருகின்றனர். இதனால் நடுத்தர குடும்பத்தினர் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது. இரவு நேரத்தில் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து செல்லும் போது திருட்டு, வழிப்பறி சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன. திண்டுக்கல் நகருக்கு தினமும் மதுரை, தேனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வரும் பஸ்கள் திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதிகளான நாகல்நகர் ரவுண்டானா வந்து நத்தம் ரயில்வே மேம்பாலம் முன்பு உள்ள மெங்கில்ஸ் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வருகின்றன. இந்த பஸ்களை ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோடு வழியாக ரயில்வே ஸ்டேஷன் வந்து ஏ.எம்.சி.,ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டிற்கும் சென்றால் மக்களுக்கு வசதியாக இருக்கும். இதுபோல் பஸ்டாண்டிலிருந்தும் வெளியூர் செல்லும் குறிப்பிட்ட பஸ்களையும் இவ்வழியே இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.

வீண் செலவாகிறது

திண்டுக்கல் புஷ்பகிரிதரன் கூறியதாவது: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு தற்போது போதிய பஸ் வசதிகள் இல்லாமலிருப்பதால் ஆட்டோவில் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் தேவையில்லாமல் பணம் செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க வெளியூரிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் நத்தம் ரோடு மேம்பாலத்தின் இடதுபுறம் வழியாக ரயில்வே ஸ்டேஷன் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு சென்றால் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நீண்ட நாட்களாக இருக்கும் பொது மக்கள் பிரச்னைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ஆய்வு செய்யப்படும்

போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: நத்தம் ரோடு ரயில்வே மேம்பாலத்தின் இடது புறத்திலிருந்து பஸ்கள் ஸ்டேஷனுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். இருந்தால் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கலெக்டர் சரவணன் கூறுகையில்,''34 டிரிப்புகள் வரை செல்வதாக தெரிகிறது. ஆய்வு மேற்கொண்டு அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்க போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ