விழிக்குமா மின்வாரியம்: மலை மின்பாதைகளில் தொடரும் இடையூறு: பருவ மழைக்கு முன்பு அகற்ற வழி காணுங்க
மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலுார், பன்றிமலை, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்துார், பழநி,சிறுமலை உள்ளிட்ட பகுதிகள் மலை சார்ந்த பகுதிகளாக உள்ளன. இவற்றிற்கு தரைப்பகுதியிலிருந்து மின்பாதை செல்கிறது.பெரும்பாலான மின்பாதை அடர்ந்த வனப்பகுதி மார்க்கமாக செல்லும் நிலையில் இயற்கை இடையூறுகளினால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது.மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் கூடுதல் பொறுப்பாக மின் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். வாரியம் சாராத ஆட்களும் மின் பணியில் ஈடுபடுவது விபத்திற்கு வழி வகுப்பதாக உள்ளது. இயற்கை இடையூறுகளால் ஏற்படும் பாதிப்பை கண்டறிய காலதாமதம் ஏற்படுவதால் மலைப்பகுதியில் நாள் கணக்கில் மின்தடை ஏற்பட்டு வாடிக்கையாளர்கள் அவதி அடைகின்றனர்.மேலும் மலை சார்ந்த தோட்டப் பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் ,மின் கம்பம் ,மின் ஒயர்களில் சர்வ சாதாரணமாக செடிகள் படர்ந்து விபத்து அபாயத்தில் உள்ளது. இதை அகற்றுவதில் உள்ள அலட்சியத்தால் அவ்வப்போது ஏராளமானோர் மின்விபத்தில் சிக்குகின்றனர். இதை தவிர்க்க பருவமழைக்கு முன்பு மலை சார்ந்த தோட்டப் பகுதி, அடர் வனப்பகுதியில் உள்ள மரக்கிளைகள், செடிகளை அகற்ற தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் போது தடையற்ற மின்சப்ளை வழங்க வழி ஏற்படும்.இதன் மீது மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.