| ADDED : நவ 13, 2025 12:23 AM
திண்டுக்கல்: ''தமிழக அரசு மருத்துவமனைகளில் 24 ஆயிரம் பேர் தேவைப்படும் இடத்தில் 12 ஆயிரம் டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளதாக,'' அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரிகளிலும் ஜூனியர் பதவியில் உள்ள டாக்டர்களை புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு பணி நியமனம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புதிதாக துவக்கப்படும் மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள், நர்ஸ்கள், பிற பணியாளர் பணியிடங்கள் பெரும்பாலான இடங்களில் உருவாக்கப்படவில்லை. ஜெய்கா திட்டத்தின் கீழ் ரூ. பல நுாறு கோடிகளில் சென்னை, கோயமுத்துார், சேலம், திருநெல்வேலி, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வேலுார், துாத்துக்குடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும் துவக்கப்பட்டுள்ளன. இக்கட்டடங்களில் சிறப்பு துறைகளை ஆரம்பிப்பதற்கு எந்த ஒரு பணியிடமும் உருவாக்கப்படவில்லை. பழைய மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், பணியாளர்கள் இங்கு பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். மாநிலத்தில் 24 ஆயிரம் டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 12 ஆயிரம் டாக்டர்களே உள்ளனர். டாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதுடன் புதிதாகவும் நியமிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.