கட்டட தொழிலாளி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கட்டட தொழிலாளி சுதன் வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வடமதுரை பி.கொசவபட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சுதன். இவரது மனைவி வனிதா. இரு குழந்தைகளுடன் 3 அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கின்றனர். இவர்கள் வழக்கமாக துாங்கும் அறையை நேற்று காலை உள்புறமாக இருந்து திறக்க முயன்ற போது திறக்க முடியவில்லை. அலைபேசி மூலம் உறவினருக்கு கூறி வரவழைத்த போது வெளி பக்கத்தில் கதவில் இரும்பு கம்பி செருகி 'லாக்' செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. உறவினர் மூலம் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது பொருட்கள் இருந்த பக்கத்து அறை கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 16 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து சுதன் அளித்த புகாரின்படி வடமதுரை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.