கேன்டீனில் ஷவர்மா சாப்பிட்ட 26 மாணவர்களுக்கு வாந்தி, பேதி
ரெட்டியார்சத்திரம்; தனியார் பொறியியல் கல்லுாரி கேன்டீனில், ஷவர்மா சாப்பிட்ட 26 மாணவர்கள் வாந்தி, பேதியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சிக்கன் சப்ளை செய்த இறைச்சி கடைக்கும், கேன்டீனுக்கும் சீல் வைக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி தனியார் பொறியியல் கல்லுாரி விடுதிக்கு, திண்டுக்கல்லில் உள்ள இறைச்சி கடையில் இருந்து, 44 ஷவர்மா தயார் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் சப்ளை செய்யப்பட்டது.இதை வாங்கி சாப்பிட்ட விடுதி மாணவர்களில் சிலருக்கு, இரவு வாந்தி, பேதி ஏற்பட்டது. கல்லுாரி நிர்வாக வாகனத்தில், அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், லோகேஷ், பிரசன்னா, கண்ணன் ஆகியோர் அதிக பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் விடுதி கேன்டீனில் ஆய்வில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், 'விடுதி மாணவர்கள் மட்டுமின்றி இங்கு ஷவர்மா சாப்பிட்ட மாணவர்களில் சிலரும் பாதிப்பிற்குள்ளானது உறுதியானது. 26க்கும் மேற்பட்டோருக்கு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கேன்டீன் மூடப்பட்டு, 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள் சப்ளை செய்த நிறுவனத்திலும் ஆய்வு தொடர்கிறது. உணவு பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறைச்சி வினியோகம் செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.