டெங்கு கொசு தடுப்பு பணியில் 400 பணியாளர்கள் அன்புடன் அதிகாரி
திண்டுக்கல், : ''திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் டெங்கு கொசுக்களை தடுக்க 400 கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்''என திண்டுக்கல் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செல்வகுமார் தெரிவித்தார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையாக சிகிச்சைஅளிக்கப்படுகிறதா...
திண்டுக்கல் சுகாதார மாவட்ட கட்டுப்பாட்டில் 39 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. இங்கு தினமும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்படுகிறது. எவ்வித பிரச்னைகளும் ஏற்படுவதில்லை. கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளதா...
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது. செயல்படாமலிருக்கும் கேமராக்களும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம். டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறதே...
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்து கொசுக்களை ஒழிக்க 400 கொசு தடுப்பு பணியாளர்கள் பணியில் உள்ளனர். அவர்கள் தினமும் வீடு வீடாக சென்று தேவையில்லாமல் தண்ணீர் தேங்கியிருக்கும் தொட்டிகளில் மருந்து தெளிக்கின்றனர். கொசு மருந்து அடிக்கின்றனர். அவ்வப்போது ஒருசிலர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களும் விரைவில் குணமடைந்து வீடுகளுக்கு செல்கின்றனர். யாருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம். மருத்துவமனைகளில் முறையாக ஆய்வு செய்கிறீர்களா...
என் கட்டுபாட்டில் உள்ள திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்வேன். அப்போது அங்கிருக்கும் நிறைகுறைகளை கேட்டறிந்து அதை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறேன். டாக்டர்கள் பற்றாக்குறை திண்டுக்கல் மாவட்டத்தில் இல்லை. பொது மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படுகிறதா...
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்கள் பிரச்னைகள்,ஊழியர்கள் பிரச்னைகளை என்னிடம் தெரிவிப்பதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் தங்கள் பிரச்னைகளை மனுக்களாக எழுதி மக்கள் போடுகின்றனர். அதை விசாரித்து அதற்குரிய நடவடிக்கையும் எடுக்கிறோம். புது வகையான காய்ச்சல் எதுவும் பரவுகிறதா...
திண்டுக்கல் மாவட்டத்தில் புது விதமான காய்ச்சல்கள் எதுவும் பரவவில்லை. மழைக்காலம் என்பதால் சாதாரண காய்ச்சலால் ஒருசிலர் பாதிக்கின்றனர். அவர்களுக்கும் சிகிச்சையளிக்கிறோம். கபசுர குடிநீரை சுகாதார நிலையங்களில் பொது மக்கள் குடிப்பதற்காக வைக்கிறோம். அதை குடிக்கும் மக்களுக்கு எளிதில் காய்ச்சல் சரியாகிவிடுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் சேதமாக உள்ளதே...
எந்தெந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் சேதமாக உள்ளதோ அவற்றை சீரமைப்பதற்காக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் சேதமான கட்டடங்கள் சீரமைக்கப்படும் என்றார்.