கருப்பணசுவாமி கோயிலில்- ஆண்கள் பங்கேற்ற விழாவில் 560 ஆடுகள்பலி
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற தேத்தாம்பட்டி கோட்டை கருப்பணசுவாமி கோயில் திருவிழாவில் 560 ஆடுகள் பலியிட்டும், சாத உருண்டைகள் படைத்து வழிபட்டனர்.தேத்தாம்பட்டி கோட்டை கருப்பணசுவாமி கோயிலில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுகிறது.பழங்காலத்தில் இருந்தே இங்கு ஆடுகளை பலியிட்டு வழிபட்டு வருகின்றனர். திருவிழா நடக்கும் நாள் ஒரு வாரத்திற்கு முன் அறிவித்ததால், அதிலிருந்து திருவிழா நடக்கும் பகுதிக்கு பெண்கள் யாரும் வரவில்லை.இந்த விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. கைக்குத்தல் பச்சரிசி சாதம்,560 செம்மறி ஆடுகள் பலியிட்டு அதன் தலைகளை கோட்டை கருப்பண்ணசுவாமி கோயில் முன்பு வைத்து, சாதத்தை உருண்டைகளாக உருட்டி பூஜை செய்தனர். தொடர்ந்து சாப்பாடு பரிமாறப்பட்டது. சாப்பாட்டினை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதால் மீதமிருந்த உணவுகள் அங்கேயே மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. சுற்றுகிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் கூறியதாவது: மழை பெய்து விவசாயம் செழிக்க இந்த திருவிழா நடத்தப்படுகிறது.இதற்காக வயல்களில் விளைந்த நெல்மணிகளை கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேர்த்திக்கடனாக பெறப்படுகிறது .ஆடுகளை பலியிட்டு சமைத்து கோட்டை கருப்பண்ண சுவாமிக்கு படையலிட்டு அதை ஆண்களுக்கு மட்டுமே அன்னதானமாக வழங்கப்படுகிறது என்றார்.