உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கனமழை தோறும் துண்டிக்கப்படும் பாலம்

கனமழை தோறும் துண்டிக்கப்படும் பாலம்

வடமதுரை: பாடியூர் என்.பாறைப்பட்டியில் சந்தனவர்த்தினி ஆற்று தரைப்பாலம் ஒவ்வொரு கன மழைக்கும் அரிக்கப்படுவதால் பல கிராம மக்கள் பரிதவிக்கின்றனர்.பாடியூர் ஊராட்சியில் கடைசி கிராமமாக இருப்பது என்.பாறைப்பட்டி. இதையொட்டி சந்தனவர்த்தினி ஆறு , அதற்கடுத்தாக திண்டுக்கல் குஜிலியம்பாறை மெயின் ரோடு உள்ளது. இங்குள்ள ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட பாலம் ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் சேதமடைகிறது. நத்தம், சாணார்பட்டி ஒன்றிய பகுதியில் சேகரமாகும் மழை நீர் சந்தனவர்த்தினி ஆறாக ம.மு.கோவிலுார், முள்ளிப்பாடி, ஆத்துமரத்துபட்டி, என்.பாறைப்பட்டி, லட்சுமணபுரம், குளத்துார் வழியே வேடசந்துார் குடகனாறு அணையில் சேர்கிறது. மாவட்டத்தில் அதிக மழை பெறும் பகுதியான நத்தம், சாணார்பட்டி பகுதியில் கன மழை பெய்தால் சந்தனவர்த்தினி ஆற்றில் அதிகளவில் நீர் வரத்து இருக்கும். இந்த ஆறு என்.பாறைப்பட்டி பகுதியில் வளைவாக செல்வதால் அகலமாக ஆற்றின்போக்கு அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருக்கும் தரைப்பாலம் ஒவ்வொரு கனமழைக்கும் பாலம் அரிக்கப்பட்டு கிராமத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதை கருதி இங்கு உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும்.

நீரில் இறங்கி கடக்கிறோம்

பி.தான்தோன்றிசாமி, கவுரவ தலைவர், வீருதும்மம்மன் கோயில், நாட்டாண்மை காரன்பட்டி: வடமதுரை ஒன்றியத்தின் கடைசி கிராமமாக இருக்கும் என்.பாறைப்பட்டிக்கு வெளியுலக இணைப்பு ரோடு வசதி என்பது ஆற்றை கடந்து செல்லும் ரோடு மட்டுமே. மற்றொரு திசையில் தெருக்களின் சிமென்ட் ரோடு வழியாக நாட்டாண்மை காரன்பட்டி, பா.புதுப்பட்டி செல்லலாம். ஆனால் மண் தரையான இந்த வண்டி பாதை பட்டா நிலங்களின் வழியே செல்லும் குறுகலானது. இவ்வழியே கார், சிறிய ரக ஆம்புலன்ஸ்கள் மட்டுமே வந்து செல்ல முடியும். தற்போது பாலம் அரிக்கப்படும் போதெல்லாம் பாய்ந்தோடும் நீரில் இறங்கியே கடந்து செல்கிறோம். இதில் விஷப்பூச்சிகளாலும், வழுக்கும் தன்மையாலும் சிரமம் உள்ளது.

-சிரமத்தில் மக்கள்

ஆர்.பொன்னுச்சாமி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர், பி.புதுப்பட்டி:பாடியூர் ஊராட்சி பகுதிக்கு சேவை வழங்கும் என்.பாறைப்பட்டி வங்கி கிளை போக்குவரத்து வசதிக்காக திண்டுக்கல் குஜிலியம்பாறை ரோட்டில் ஏரமநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் இயங்குகிறது. இதனால் பி.புதுப்பட்டி பகுதியினர் என்.பாறைப்பட்டி கிராமம் வழியே தான் சென்று வருகின்றனர். இதே போல் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லவும் இந்த ஆற்றை கடந்து செல்ல வேண்டும். பாலம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் சிரமமமாக உள்ளது.

-இழுபறி நீடிக்கிறது

பி.சக்திவேல், தே.மு.தி.க. முன்னாள் ஒன்றிய செயலாளர், வடமதுரை:உயர்கல்வி, கல்லுாரி படிப்பிற்கு ஆற்றை கடந்தே செல்ல வேண்டும். அப்போது ஆற்றில் இறங்கி கடந்து செல்லும் போது விஷப்பூச்சிகளால் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.குறிப்பாக இரவு நேரங்களில், பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்தும் கிராமங்கள் வடமதுரை ஒன்றியத்திலும், பாலம் பகுதி திண்டுக்கல் ஒன்றியத்திலும் இருப்பதால் இங்கு உயர்மட்ட பாலம் அமையாமல் இழுபறி நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை