உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வலுவிழந்த மேல்நிலை தொட்டி, குப்பைமேடான பூங்கா திண்டுக்கல் 14வது வார்டில் தலைதுாக்கும் பிரச்னைகள்

வலுவிழந்த மேல்நிலை தொட்டி, குப்பைமேடான பூங்கா திண்டுக்கல் 14வது வார்டில் தலைதுாக்கும் பிரச்னைகள்

திண்டுக்கல்: ஆபத்தான நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, முடிவுக்கு வராத பாதாள சாக்கடைத்திட்டம் என திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டில் பிரச்னைகள் தலைதுாக்கி நிற்கின்றன. வ.உ.சி., நகர், விவேகானந்தா நகர், விவேகானந்தா நகர் விரிவாக்கம், ஆர்த்தி தியேட்டர் ரோடு உள்ளிட்ட வி.ஐ.பி., ஏரியாக்களை உள்ளடக்கிய இந்த வார்டில் பெரும் மதிப்பிலான மக்கள் நலத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் சாலை அமைத்துக்கொடுத்திருப்பதாக கூறும் மக்கள் அதிகரித்திருக்கும் நாய் தொல்லை, மழைநீர் சேகரிப்பு வடிகால் இல்லாதது பெரும் குறையாக உள்ளதாக கூறினர். பாதாள சாக்கடையால் படாதபாடு முனியாண்டி, விவேகானந்தா நகர்: பாதாள சாக்கடை அடைப்பால் படாதபாடு படுகிறோம். இதன் பணிகளை முடிக்காமல் பாதியில் விட்டு சென்றுவிட்டனர். மாதந்தோறும் சாக்கடை அடைப்பால் வீட்டிலிருந்து கழிவுநீர் வெளியேற்ற முடியாமல் சிரமத்தை சந்திக்கிறோம். சாக்கடை துார்வாருவதற்கும் ஆட்கள் சரியாக வருவதில்லை. அண்ணாநகர் பகுதி மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கான்கிரீட் துாண்கள் பெயர்ந்து வலுவிழந்து நிற்கிறது. விஷப்பூச்சிகள் அடைக்கலம் ராமதாஸ் ராஜூ, விவேகானந்தா நகர் விரிவாக்கம்: வ.உ.சி., நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தொட்டி கட்டும் பணிநடந்தது. ஆனால் பாதியிலே கைவிடப்பட்டது. பூங்கா பணிகள் முடித்து மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. பயன்பாடற்று இருப்பதால் பூங்காவே குப்பை மேடாக மாறிவிட்டது. விஷப்பூச்சிகள் அடைக்கலம் புகும் இடமாக மாறிவிட்டது. சமூகவிரோத செயல்களுக்கும் ஏற்ற இடமாக மாறுவதை தடுக்க வேண்டும். பிரச்னையை தட்டிக்கழிக்கின்றனர். தனபாலன், கவுன்சிலர் (பா.ஜ.,): பிரச்னைகள் குறித்து பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் பேசியும் மெத்தன செயல்பாட்டால் பணிகள் தாமதமாகிறது. அண்ணாநகர் உட்பட 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ரூ. 18 லட்சம் செலவில் புனரமைக்க டெண்டர் விடப்பட்டது. பாதாள சாக்கடை பணித்திட்டத்தில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த கடைசியாக நடந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டினேன். ஆனால் நிதி பிரச்னை என தட்டிக்கழிக்கின்றனர். கிடப்பில் போடப்படும் பணிகளால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை