உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டோர மின்கம்பங்களை அகற்றாததால் விபத்து

ரோட்டோர மின்கம்பங்களை அகற்றாததால் விபத்து

குஜிலியம்பாறை; குஜிலியம்பாறை முதல் கரூர் மாவட்ட எல்லை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட நிலையில் சாலையோர மின்கம்பங்களை அகற்றாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இது குறித்த புகார் எழுந்த நிலையில் இன்னும் மின்வாரியம் சரி செய்ய முன் வரவில்லை. திண்டுக்கல் குஜிலியம்பாறை கரூர் ரோடு இரு வழி சாலையாக இருந்த நிலையில் தொட்டனம் பட்டியிலிருந்து எரியோடு, பாளையம் வழியாக மாவட்ட எல்லை வரை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி துவங்கியது. பணிகள் முடிவுற்ற நிலையில் முழுமை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குஜிலியம்பாறையில் இருந்து பாளையம், வெள்ளப்பாறை பிரிவு, தண்ணீர்பந்தல், டி.கூடலுார் வரை குறிப்பாக மெயின் ரோட்டில் உள்ள மின் கம்பங்கள் இன்னும் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. ரோட்டில் உள்ள மின் கம்பங்களில் மின்சாரம் செல்லும் நிலையில் ஏதேனும் விபத்து நடந்தால் விபரீதம் எற்பட வாய்ப்பு உள்ளது. பஸ் போக்குவரத்து , பள்ளி வாகனங்கள், கனரக வாகன போக்கு வரத்து நிறைந்த இப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைத்து வாகன ஓட்டி , பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். டிவைடரில் தேவை பூச்செடி எஸ்.ஆறுமுகம், சமூக ஆர்வலர், பாளையம்: குஜிலியம்பாறை, பாளையம், கரூர் மெயின் ரோடு இருவழி சாலையாக இருந்த நிலையில் நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்கப்பட்ட பிறகு கனரக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. பஸ் போக்குவரத்து, தனியார் பள்ளி கல்லுாரி வாகன போக்குவரத்து என கூடுதலான போக்குவரத்து உள்ள நிலையில் மெயின் ரோட்டிலேயே பல இடங்களில் வரிசையாக மின் கம்பங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு வாகனம் மோதி மின் லைன் சாய்ந்தால் உயிர் சேதம் ,பொருள் சேதம் கூடுதலாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் சாலையோர மின் கம்பங்களை மாற்றி அமைக்கவும், ரோட்டின் மையப் பகுதியில் உள்ள டிவைடரில் பூச்செடிகளை நடவு செய்ய முன் வர வேண்டும் . ரோட்டில் பாயும் குடிநீர் பி. சீரங்கன், சமூக ஆர்வலர், பாளையம் : தொட்டனம்பட்டியில் இருந்து கோவிலுார் குஜிலியம்பாறை வழியாக டி.கூடலுார் வரை அமைக்கப்பட்ட இந்த நான்கு ரோடு பணி 100 சதவீதம் முழுமை பெறவில்லை . பல இடங்களில் ரோட்டுக்கும் அடியில் செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் தண்ணீர் பீரிட்டு வெளியேறுகிறது. தண்ணீர் வெளியேறுவதும் அந்த இடத்தை சரி செய்வதுமாகவே உள்ளனர். திண்டுக்கல் வேடசந்தூர் கரூர் ரோட்டில் டோல்கேட் உள்ளதால், கட்டணம் கொடுக்க விருப்பம் இல்லாத வாகன ஓட்டிகள், குஜிலியம்பாறை வழித்தடத்தை நாடுகின்றனர். இதனாலும் போக்குவரத்து அதிகரித்துள்ளது. போக்குவரத்து நிறைந்த நான்கு வழி சாலையில் ரோட்டோர மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை