உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நெடுஞ்சாலையில் பாதுகாப்பின்றி தொடரும் விபத்துக்கள்

நெடுஞ்சாலையில் பாதுகாப்பின்றி தொடரும் விபத்துக்கள்

நத்தம்: -நத்தம் - கோபால்பட்டி நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான நிலையில் ஒளிரும் மின் விளக்குகள், ஒளிரும் பட்டைகள் ,சாலை தடுப்புகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதததால் விபத்துக்கள் தொடர்கிறது.மாவட்டத்தை பொறுத்தவரை சாலை வசதி என்பது இன்றளவும் பல்வேறு கிராமங்களில் தன்னிறைவு பெறாத நிலையில் உள்ளது.குறிப்பாக நத்தம் பகுதி மலைக்கிராமங்களில் இன்று வரையும் மண்பாதையே உள்ளது.இதனிடையே திண்டுக்கல், நத்தம் 2 நகரங்களை இணைக்கும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து சாணார்பட்டி, கோபால்பட்டி, கணவாய்பட்டி வழியாக நத்தம் வரையில் நெடுஞ்சாலை உள்ளது.7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையை 10 மீட்டர் அகல சாலையாக மாற்றப்பட்டுள்ளது. பழநிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நடந்து செல்வதற்காக 4 அடி அகலத்தில் பேவர்பிளாக் கற்கள் மூலம் நடைபாதை, கன்னியாபுரம் அருகே சுங்கவரி கட்டண மையமும் அமைக்கப்பட்டது.சாலை தரமாக அமைக்காததால் லேசான மழைக்கு கூட தாக்குப்பிடிக்காது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பள்ளம் மேடாக மாறிவருடுகிறது. சாலை பயன்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான நிலையில் ஒளிரும் மின்விளக்குகள், சோலார் விளக்குகள், ஒளிரும் பட்டைகள் போன்றவை அமைக்காததாலும், சாலை தடுப்புகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் விபத்துக்கள் தொடர்கிறது. நத்தம் நெடுஞ்சாலை எர்ரமநாயக்கன்பட்டி பகுதியில் வளைவாக இருந்த சாலையை புதிய சாலை அமைக்கும் போது சரி செய்யவில்லை. மாறாக அந்த பகுதியில் சாலையின் நடுவே சிமென்ட் தடுப்புகள் நுாறு அடிக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு சாலை வளைவு இருக்கும் பகுதியோடு முடிந்து விடுகிறது. இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் தடுப்பில் மோதி விபத்தில் சிக்குகின்றன. விபத்தை தடுக்க சாலை தடுப்புகளை 50 அடி நீளத்திற்கு அதிகப்படுத்தி வைத்து ஒளிரும் எச்சரிக்கை மின் விளக்குகளை பொருத்த வேண்டும். அப்போதுதான் அந்த பகுதியில் விபத்தை தடுக்க முடியும். மேலும் சாலையில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த நெஞ்சாலை துறை முன்வர வேண்டும்.

ஆக்கிரமிப்பில் நடைபாதை

சோ.ஆனந்தகிருஷ்ணன், பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு, மாநில துணைத் தலைவர், வேம்பார்பட்டி: திண்டுக்கல் -நத்தம் சாலை அமைத்த ஓராண்டிலே சேதமடைந்து பள்ளம் மோடாக உள்ளது. பாதயாத்திரை பக்தர்களுக்காக போடப்பட்ட நடைபாதை பல இடங்களில் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளது. சில இடங்களில் பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்துள்ளன. இதனை உடனே சீரமைக்க வேண்டும். சாலையில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நான்கு வழிச்சாலையாக மாற்றுங்க

ஆர்.எப்.சி.ராஜ்கபூர், காங்கிரஸ் வட்டார தலைவர், கணவாய்பட்டி: நத்தம் மெய்யம்பட்டி, எர்ரமாநாயக்கன்பட்டி குறிப்பாக கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏர்ரமநாயக்கன்பட்டி பகுதியில் சாலை வளைவாக உள்ள பகுதியில் மட்டும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் வாகனத்தை திருப்பிய உடன் தடுப்புச் சுவர் வருவதால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. குறிப்பிட்ட அந்த பகுதியில் மட்டும் சாலை அமைக்கப்பட்டதிலிருந்து கார்,பஸ், வேன், லாரி என பத்திற்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதை கருதி அங்கு சாலை தடுப்பை கூடுதல் துாரத்திற்கு அமைக்க வேண்டும்.நான்குவழிச்சாலை அமைத்தால் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்பவர்கள் நத்தம் சாலையை பயன்படுத்த வசதி ஏற்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை