வழக்கறிஞர் மீது தாக்கு; வேடசந்துாரில் போராட்டம்
வேடசந்துார்: வேடசந்துார் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிபவர் வடமதுரை பிலாத்து பகுதியைச் சேர்ந்த பகவத்சிங். இவர் வடமதுரை அருகே டூவீலரில் சென்றபோது அவருக்கு முன்னால் டூவீலரில் சென்றவர் எச்சில் துப்பி உள்ளார். இதை பகவத்சிங் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் முத்தனாங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், சோனைமுத்து, பவுன்ராஜ் மற்றும் போலீஸ்காரர் அமர்நாத் ஆகியோர் சேர்ந்து தாக்கினர். வடமதுரை போலீசார் மணிகண்டன் ,சோனைமுத்து இருவரையும் கைது செய்தனர்.இதனிடையே முத்தனாங்கோட்டை மணிகண்டன் கொடுத்த புகாரில் வழக்கறிஞர் பகவத்சிங் மீதும் வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதனிடையே வழக்கறிஞர் பகவத்சிங்கை தாக்கிய போலீஸ் காரர் அமர்நாத் , பவுன்ராஜை கைது செய்ய வலியுறுத்தி வேடசந்துார் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.