உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எமிஸ் பணியிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க சங்கம் வலியுறுத்தல்

எமிஸ் பணியிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல்:கற்பிக்கும் பணி பாதிக்கப்படுவதால் 'எமிஸ்' பணியிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்கள் பராமரிக்கப்பட்டு அதற்கேற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்களின் தினசரி செயல்பாடுகளும் எமிஸ் தளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது.எமிஸ் தளத்தில் தகவல்கள் பதிவேற்றம், நீக்கம் உட்பட பராமரிப்பு பணிகளும் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கூடுதல் பணிச்சுமையாக இருப்பதால் இதிலிருந்து விடுவிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.தேசிய ஆசிரியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் விஜய் கூறியதாவது : எமிஸ் பணியை செய்ய ஆசிரியர்கள் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக மாணவர்களை கவனிப்பதற்கும், பாடங்களை நடத்துவதற்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர். எமிஸ் பணிகளை செய்ய அதற்கென்று தனியாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என கல்வித்துறை அமைச்சர் மகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். அதன்படி அவர்களை உடனடியாக அனைத்து மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும். டிசம்பரில் அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. மாணவர்களின் தேர்ச்சிக்காக ஆசிரியர்கள் முழுமூச்சாக பணி செய்ய வேண்டிய நிலையும் உள்ளது. இதை கருதி எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து அதற்கென்று அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !