ரசாயன உரம், மருந்து பயன்பாட்டை தவிர்க்கலாமே: இயற்கை வழியில் விவசாயத்தை மேற்கொள்ள நடவடிக்கை தேவை.
தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில் விவசாயமே பிரதானமாக உள்ளது.இங்கு ஏராளமான ஏக்கரில் காய்கறி பயிர்கள், பழப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப விவசாய விளைபொருளை அதிகரிக்க ரசாயன உரங்கள், மருந்துகள் தெளிக்கும் நடைமுறை 20 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால் அதிகளவு உற்பத்தி கிடைப்பதை அடுத்து சாயன பண்பாட்டை விவசாயிகள் விரும்புகின்றனர். இதனால் இயற்கை வழி வேளாண் விவசாயம் அறவே இல்லாத நிலை உள்ளது.இயற்கை விவசாயத்திற்கு தேவையான தொழு உரம், கால்நடை வளர்ப்பு, அங்கக பொருட்களின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டதால் எளிமையான முறையில் கிடைக்கும் ரசாயன உரம், மருந்துகளால் விவசாயம் என்ற நிலைக்கு தற்போதுள்ள விவசாயிகள் மாறி உள்ளனர். காலப்போக்கில் இதன் பயன்பாட்டால் விவசாய நிலங்கள் மலட்டு தன்மையாகி நோய் தாக்குதல் உற்பத்தி பாதிப்பு என மண்வளம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நிலை உள்ளது. அரசு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் தோட்டக்கலை துறையினர் முறையாக ஆய்வு மேற் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டாக உள்ளது. இவ்வாறாக உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் அதன் தன்மையை இழந்துள்ளது. மேலும் மரபணு மாற்றப்பட்ட விதைகள். ரசாயன பயன்பாடுகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில் நுண்ணூட்ட சத்துக்கள்,சுவை நலிவடைந்து வருகிறது. மாறிவரும் நவீன காலத்தில் தற்போதுள்ள மக்கள் இயற்கை வழியில் கிடைக்கும் பொருட்களின் மீது ஆர்வம் கொண்டு கூடுதல் விலை கொடுத்து அவற்றை வாங்கும் நிலை உள்ளது. தரமான காய்கறி, பழங்கள் இயற்கை வழியில் உற்பத்திக்கு வழிவகை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரசாயன உரம், மருந்து பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வழியில் விவசாயத்தை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொய்வின்றி செய்யுங்க அரசு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் திட்டங்களை அறிவித்த போதும் தோட்டக்கலைத் துறையினர் அவற்றை விவசாயிகளிடம் முறையாக கொண்டு சேர்க்காத நிலை உள்ளது. இது குறித்த விழிப்புணர்வு, கள ஆய்வுகளை தோட்டக்கலைத்துறையினர் முறையாக மேற்கொள்ளும் பட்சத்தில் இயற்கை வேளாண் உற்பத்தி துவங்கும். அதே நிலையில் விவசாயிகளும் ரசாயன உர பயன்பாட்டை குறைத்து இயற்கை வேளாண்மைக்கு உண்டான இடுபொருட்கள், அங்கக பொருட்களை மீது ஆர்வம் செலுத்தி வந்தால் மட்டுமே இவ்விவசாய முறை நடைமுறைக்கு வரும். அரசு இதுபோன்ற முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியங்களை அதிகரித்து இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க தொடர் நடவடிக்கையை தொய்வின்றி செய்ய வேண்டும். - ரவிச்சந்திரன், காபி வாரிய உறுப்பினர், தாண்டிக்குடி.