உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மரக்கன்றுகளை நடவு செய்ய வாட்ஸ் ஆப்பில் விழிப்புணர்வு

 மரக்கன்றுகளை நடவு செய்ய வாட்ஸ் ஆப்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நடவு செய்ய வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.மாவட்டத்தில் ரோடு விரிவாக்க பணிகளுக்காக ரோட்டோரங்கள்,பொது இடங்களில் நின்ற மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வேரோடு சாய்த்தனர். இதுதவிர பலரும் வீடுகள் ,கட்டடங்கள் கட்டுவதற்காக மரங்களை அழித்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்துள்ளன. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காற்றுமாசுபாடு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதைதடுக்க திண்டுக்கல் வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வன அலுவலகங்களில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தேக்கு,குமிழ்,மகாகனி போன்ற மரக்கன்றுகளை வளர்த்து விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள்,விருப்பமுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்குகின்றனர். அந்த வகையில் தற்போது மழைக்காலம் தொடங்கியிருப்பதால் இத்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் வகையில் திண்டுக்கல் வன மண்டலத்தில் பணியாற்றும் நுாற்றுக்கும் மேலான வனத்துறை அலுவலர்கள் தங்கள் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்து ஒரு நாள் முழுவதும் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். இதை பார்த்து ஏராளமானோர் மரக்கன்றுகளை வாங்கி குளக்கரைகள், பூங்காக்கள், ரோட்டோரங்கள், பள்ளி வளாகங்கள் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் நடவு செய்ய தொடங்கி உள்ளனர். இதன்மூலம் வனப்பரப்பை அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ