ஆடுகளால் புகழ் பெற்ற அய்யலுார் வாரச்சந்தை
வ டமதுரை அருகே அய்யலுாரில் வாரந்தோறும் வியாழன்களில் சந்தை கூடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை காய்கறி, பழம், மளிகை பொருட்கள் என மட்டுமே விற்கப்பட்ட இந்த சந்தை தற்போது ஆடுகள் விற்பனையால் தமிழக அளவில் பிரபலமாகியுள்ளது. வழக்கமான சந்தையில் மளிகை, காய்கறிகள் விற்கும் வியாபாரிகள் காலை 8:00 மணி துவங்கி இரவு 9:00 மணி வரை கடை வைக்கின்றனர். ஆனால் ஆடு, கோழி விற்பனை அதிகாலை 4:00 மணி முதல் காலை 9:30 மணிக்குள் முடிந்துவிடும். இங்குள்ள ஆட்டுச்சந்தையால் தற்போது வடமதுரை ஒன்றியத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் கோழி, ஆடு வளர்ப்பில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். ஆடி மாதத்திலும், தீபாவளி, காணும் பொங்கல், பக்ரீத் என சில முக்கிய பண்டிகை நேரங்களில் ஆடுகள் விற்பனை பல கோடி ரூபாய்க்கு நடக்கிறது. இத்துடன் பந்தய சேவல் விற்பனையும் ரோட்டோரம் நடக்கிறது. சேவல்களை சண்டையிட செய்து அதன் திறனை சோதித்து வாங்கி ஈரோடு, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும் சில வியாபாரிகள் இங்கு சந்தை நாளில் முகாமிடுகின்றனர். மலை சார்ந்த பகுதியில் கலப்பற்ற தீவனங்களை தின்று வளரும் ஆடுகள் அதிகளவில் இந்த சந்தையில் விற்பனைக்கு வருவதால் பல மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் அய்யலுார் சந்தைக்கு ஆர்வமுடன் வருகின்றனர்.