பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்; ஆபத்தான முறையில் பார்க்கிங் பாதைகள் விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கைக்கு பா.ஜ., வலியுறுத்தல்
திண்டுக்கல்: பழநியில் ஐயப்ப பக்தர்கள் குவியும் நிலையில் இவர்கள் வரும் வாகனங்கள் பார்க்கிங் வந்து செல்லும் வழிகள் ஆபத்தான முறையில் இருப்பதால் விபரீதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.சபரிமலை செல்லும் பக்தர்கள் பெரும்பாலானோர் பழநிக்கு வருகின்றனர். நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் ஆதற்கேற்ப பார்க்கிங் வசதிகள், வெளியூர் பக்தர்களின் பஸ்கள் வந்து செல்லும் வழிகள் சரிவர இல்லை. குறிப்பாக கிழக்கு கிரிவீதியில் உள்ள பெரிய பார்க்கிங்கில் பெரும்பாலான வாகனங்கள் குவிகின்றன. பழநியாண்டவர் கல்லுாரி வழியாக பார்க்கிங்கிற்கு வரும் வாகனங்கள் இவ்வழியாக வெளியேறும்.ஆனால் தற்போது சீசன் தொடங்கியும் போதிய வசதிகள் செய்யப்படவில்லை. பார்க்கிங்கிலிருந்து பைபாசிற்கு செல்லும் வழி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மழை பெய்தால் சகதியாக மாறி வாகனங்கள் சென்றுவரவே பெரும் இடையுறாக உள்ளது. விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கூறியதாவது : பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கென பிரதான பெரிய பார்க்கிங் பகுதியாக இருப்பது ஒன்றுதான். அதற்கு வந்து செல்வதற்கான வழி மோசமாக உள்ளது. பல முறை கோரிக்கை விடுத்தும் செவி கொடுப்பதில்லை. பக்தர்களின் பிரதான வசதியான கார் பார்க்கிங் வழியை சரி செய்ய வேண்டும். பொதுப்போக்குவரத்து மூலம் வரும் பக்தர்கள் ஆட்டோ, குதிரை வண்டிகள் வாயிலாக அடிவாரம் வருவர். தற்போது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பெரும்பாலன இடங்களில் பேரிகாட் போட்டு அடைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் நீண்ட துாரம் நடந்து வரும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கும் இலவச வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.