பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழை வழங்கலாமே; கல்வி, வேலைவாய்ப்பில் பின்னடைவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினருக்கு வழங்கப்படும் எஸ்.டி., ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் பெரும் வாழ்வியல் சிரமங்களை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள், கல்வி உதவிதொகைகள், மானியம், இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகியவற்றுக்கு ஜாதி சான்றிதழ் அவசியமாக உள்ளது. இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படும் எஸ்.டி., சான்றிதழ் இன்றளவிலும் பெரும்பாலானோருக்கு கிடைக்காததால் அந்த மக்களின் பிள்ளைகள் கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை அரசு உதவிகளை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வேலை இடஒதுக்கீடு, முன்னுரிமை உட்பட பல்வேறு காரணங்களுக்கு எஸ்.டி., சான்றிதழ் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து எஸ்.டி., சான்றிதழ் வழங்கும் அதிகாரம் ஆர்.டி.ஓ.,க்கு மாற்றி வரையறுக்கப்பட்டது. அதன்பிறகு உண்மையான பூர்வகுடி மலைவாழ் மக்களுக்கும் கூட எஸ்.டி., சான்றிதழ் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. மானுடவியல் ஆய்வாளர்களின் அறிக்கை, கொடிவழி சாவிதா உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் எஸ்.டி., சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றாலும் மந்தவேகம், அலைக்கழிப்பு உள்ளிட்டவைகளால் மலைவாழ் மக்கள் தங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கவேண்டிய பலன்களை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய வத்தலகுண்டு, பரசுராமபுரம், கம்பிளியம்பட்டி, புது ஆயக்குடி, குட்டிகரடு, வாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, நத்தப்பட்டி, வைவேஸ்புரம் உட்பட 22 கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். 12 ஆயிரம் பேர் கணக்கிடப்பட்டுள்ள நிலையில் இவர்களில் ஒருசிலரே எஸ்.டி. சான்றிதழ் பெற்றுள்ளனர். மீதிபேர் தகுதி இருந்தும் இன்றும் சான்றிதழுக்காக அரசு அலுவலகங்களில் கதவுகளை தட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ... போராடும் நிலை திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் பல தலைமுறைகளாக வசிக்கின்றனர். மாநில மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைபடி எஸ்.டி., சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.டி., சான்றிதழ் பெற பழங்குடியினர் போராடும் நிலை உள்ளது. அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர். இதனால் பள்ளி ,கல்லுாரி மாணவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்காத நிலை உள்ளது. மேலும் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தகுதியான பழங்குடியினர் அனைவருக்கும் எஸ்.டி.சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.- அஜய்கோஷ், மாநில துணை பொதுச்செயலாளர், மலைவேடன் முன்னேற்ற சங்கம். திண்டுக்கல்.