உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேடசந்துார் குளங்களை நிரப்ப காவிரி நீர்; மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றலாமே

வேடசந்துார் குளங்களை நிரப்ப காவிரி நீர்; மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றலாமே

வேடசந்துார் : வேடசந்துார் வறட்சி பாதித்த பகுதி என்பதால் கரூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து குளங்களை நிரப்பி இப்பகுதியை செழுமையான பகுதியாக மாற்றுவதாக தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். இதற்கான ஆய்வுகள் நடந்து முடிந்தும் இப்பணிகளை துவக்குவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் இதன் பணிகளை விரைந்து துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் வேடசந்துார் தொகுதி மட்டுமே வறட்சி பாதித்த பகுதியாகும். வேடசந்துார், வடமதுரை, குஜிலியம்பாறை என மூன்று ஒன்றியங்களை உள்ளடக்கிய இத்தொகுதியில் 2.50 லட்சம் பேர் உள்ளனர். போதிய வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் 30 ஆண்டுகளுக்கு முன்பே இத்தொகுதியை வறட்சி பாதித்த தொகுதியாக தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகுதான் அரசு மானிய உதவியுடன் ஏராளமான நுாற்பாலைகள் கொண்டுவரப்பட்டன. தற்போது நுாற்பாலைகள் பல மூடப்பட்டு விட்டன. நுாற்பாலைகள் சொந்த தேவைகளுக்காக சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம் அமைத்தாலும், மின் லயனை பயன்படுத்துவதற்காக திறந்த வெளி மின்கட்டணம் என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு முறை 6 முதல் 8 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் இதன் உயர்வை குறைத்தால்தான் நுாற்பாலைகளை லாபத்தில் இயக்க முடியும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேடசந்துார் வறட்சி பாதித்த பகுதி என்பதால் கரூர் காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் காவிரி நீரை கொண்டு வந்து தொகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் நிரப்பி, பசுமை நிறைந்த பூமியாக மாற்றுவோம் என சட்டசபை தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். இதற்கான ஆய்வு பணிகள் நடந்தாலும் இன்று வரை திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதோடு வேடசந்துார் குடகனாற்றில் தொடர்ந்து கழிவுநீர் வருவதால் ஆற்று நீர் மற்றும் அழகாபுரி அணை நீர் உவர்ப்பு நீராக மாறிவிட்டது. விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் குடிநீரை கூட குடிக்க முடியாமல் விலை கொடுத்து மினரல் வாட்டர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடகனாறு , குடகனாறு அணை பகுதியில் கருவேல முட்கள் வேறு நிறைந்து கிடப்பதால் இவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேற்கண்ட பிரச்னைகள் மீது துணை முதல்வர் உதயநிதி கவனம் செலுத்த செயல்படுத்த முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை