வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் துர்கா ஆய்வு செய்தார். ஒட்டன்சத்திரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.118.78 கோடி மதிப்பில் நடந்து வரும் பணிகள், அறிவுசார் மையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள், கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் துர்கா ஆய்வு செய்தார். தொடர்ந்து குறிஞ்சி நகர் ரேஷன் கடை, தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள், விருப்பாச்சி இலங்கை அகதிகள் முகாம் வீடுகள் கட்டும் பணி, வீரலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி, ரெட்டியபட்டி முதல் பத்தொன்பதுபுதுார் வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். தாசில்தார் சண்முகம், நகராட்சி கமிஷனர் சுவேதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சவடமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஹிரா, முருகன் உடன் இருந்தனர்.