சீரமைப்பு பணிகளில் தொடரும் மெத்தனம்; மீண்டும் தொடர்வதால் மக்கள் பரிதவிப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் கண்துடைப்பிற்காக பணிகள் செய்வதை நிறுத்த வேண்டும். இதனால் ஏராளமான பாதிப்புகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டம் முழுவதும் ரயில்வே சுரங்கபாதைகளில் நீர் தேங்குவது,ரோடுகளை சீரமைப்பது,புதிய ரோடுகள் அமைப்பது.சேதமான தரைப்பாலங்களை சீர்படுத்துவது,பாதாள சாக்கடைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரை தடுப்பது உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபடும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கண்துடைப்பிற்காக பணிகளை செய்கின்றனர். சீரமைப்பு பணிகள் நடந்த சில நாட்களிலே மீண்டும் அதே பிரச்னைகள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கின்றனர். இதனால் அரசு நீதியும் ரூ.லட்சக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது. மக்களும் பெரியளவில் பாதிக்கின்றனர். மக்கள் சில நேரங்களில் அவர்களுக்குரிய பிரச்னைகளை அதிகாரிகளை தொடர்பு கொண்டு சொன்னால் முறையாக பதிலளிக்காமல் அழைப்பை துண்டிக்கும் நிலை தான் தொடர்கிறது. தொடரும் இப்பிரச்னையால் எத்தனையோ பிரச்னைகளுக்கும் இன்னும் தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. மக்களும் வேறு வழியின்றி அவற்றை கடந்து செல்கின்றனர். சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் கண்துடைப்பிற்காக பணிகளை செய்யாமல் முறையாக செய்ய முன் வர வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும். ......மக்கள் பணிமேல் அதிகாரிகளுக்கு பயந்து ஏனோ தானோ என பணிகளை செய்யாமல் செய்யும் பணிகளை முறையாக செய்தால் மக்களும் நிம்மதியடைவர். அந்த பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். புகார் கொடுத்தால் அந்த நேரம் மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு மற்ற நேரங்களில் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு முழுமையான தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குமரேசன்,தலைவர்,வழக்கறிஞர்கள் சங்கம்,திண்டுக்கல்.