பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம்
ஒட்டன்சத்திரம்: 'வார்டு பணிகளை நிறைவேற்ற தாமதம் ஏற்படுவதாக ' ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டம் தலைவர் திருமலைசாமி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுப்பிரமணியபிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், நகரமைப்பு அலுவலர் தன்ராஜ், வருவாய் அலுவலர் விஜய் பால்ராஜ், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராம்ஜி கலந்து கொண்டனர். கவுன்சிலர்கள் விவாதம் முகமது மீரான் (காங்.,): சம்சுதீன் காலனி, அண்ணாநகர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இன்னும் பணிகள் தொடங்கவில்லை. மழைக்காலம் துவங்கிய நிலையில் பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும். பொறியாளர்: விரைந்து முடிக்கப்படும் கனகராஜ் (தி.மு.க.,): வார்டில் நான் கூறிய எந்த பணிகளும் முறையாக செய்யவில்லை. என்னென்ன பணிகள் செய்து உள்ளீர்கள் என்பதை காட்டுங்கள்.கன்னிமார் கோயில் பகுதியில் போர்வெல் தண்ணீர் வினியோகம் செய்வதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்க பலமுறை கூறியும் இன்னும் நிறைவேற்ற வில்லை. பொறியாளர்: வார்டில் பல பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன செல்வராஜ் (தி.மு.க.,): ஆர்.எஸ்.பி.நகரில் ரோடுகள், சாக்கடை அமைக்க வலியுறுத்தியும் செய்யவில்லை. கே.கே.நகர் ரேஷன் கடை முன்பு செல்லும் ரோடும் போடப்படாமல் உள்ளது. அழகேஸ்வரி (தி.மு.க.,): குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும். வார்டு பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் பொறியாளர்: நடவடிக்கை எடுக்கப்படும் ஜெயமணி (தி.மு.க.,): சாஸ்தா நகரில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகளை தொய்வின்றி விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.