நெடுஞ்சாலையில் பள்ளத்தால் சிரமம்
வடமதுரை: வடமதுரை நான்கு வழிச்சாலை சந்திப்பில் நெடுஞ்சாலையில் வேகத்தடை, அதன் அருகில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வடமதுரை நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் இருபுறமும் அடுத்தடுத்து இரு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தனியார் வங்கி எதிர்புறம் இருக்கும் வேகத்தடை அருகிலேயே தொலைபேசி கேபிள் பதிக்க தோண்டிய பள்ளத்தில் மழைநீர் சென்றதால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வேகத்தடையில் கனரக வாகனங்கள் ஏறி இறங்குவதால் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. வேகத்தடையும், அருகிலேயே பள்ளமும் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். உயரம் குறைவான வாகனங்கள் பள்ளத்தில் இறங்கும்போது ரோட்டில் உராயும் நிலை உள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கில் பஸ்கள், சரக்கு வாகனங்கள், டூவீலர்கள் பயணிக்கும் நிலையில் இப்பகுதியில் சீரமைப்பு பணிகளை செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும்.