திண்டுக்கல்லில் ஒரே நாளில் 193 மி.மீ., மழை
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 193 மி.மீ.,மழை பதிவாகியிருந்த நிலையில் நேற்றும் 4 மணி நேரம் இடை விடாது மழை பெய்தது.வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதலே மழை பெய்ய தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை இடை விடாது 4 மணி நேரம் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நீடிக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் 193 மி.மீ.,மழை பதிவாகி உள்ளது.நிலக்கோட்டை : நிலக்கோட்டை, கொடைரோடு சுற்றுப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்த நிலையில் நேற்று மதியம் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்களில் தண்ணீர் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.