குழுவில் சர்ச்சை பதிவு: பயிற்றுனரிடம் விசாரணை
சின்னாளபட்டி: மாணவர்களுக்கான சமூக வலைதள குழுவில் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டதாக காந்திகிராம பல்கலை சுகாதார ஆய்வாளர் பயிற்றுனரிடம் விசாரணை நடந்தது.காந்திகிராம பல்கலை சுகாதார ஆய்வாளர் பயிற்றுனர் ரங்கநாதன். மாணவர்களை ஒருங்கிணைக்க வலைதள குழு ஒன்றை நடத்தி வந்தார். இதில் பாடம் தொடர்பான தகவல்களும், அது சார்ந்த பிற நிகழ்வுகளையும் பகிர்வார். மது, போதை பழக்கங்களுக்கு எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டு வந்த அவர் மது பழக்கம் பரவுவதற்கு காரணமான அரசியல் கட்சி குறித்து வேறொருவரின் பதிவை இக்குழுவில் பகிர்ந்தார்.அரசியல் சார்ந்த கருத்துக்களை பேராசிரியர் பதிவிடுவதாக கூறி மாணவர்கள் சிலர் ஸ்க்ரீன் ஷாட் மூலம் போலீசாருக்கு தகவல் அனுப்பினர். எழுத்துப்பூர்வமான புகார் இல்லாததால் போலீசார் பல்கலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அறிவுறுத்தலின்பேரில் துணைவேந்தர் பஞ்சநதம் தலைமையிலான குழுவினர் ரங்கநாதனிடம் விசாரணை நடத்தினர். பிரச்னை பெரிதாவதை தவிர்க்க அவரை விடுப்பில் செல்ல அறிவுறுத்தினர்.