ரோடு இன்றி டோலியில் நோயாளிகள் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களால் அதிருப்தி
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதி கூக்காலில் ரோடு வசதியின்றி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை 'டோலி' கட்டி துாக்கி செல்லும் அவலம் தொடர்கிறது.கொடைக்கானல் கூக்கால் ஊராட்சியில் உள்ளது குண்டுபட்டி அம்பேத்கர் நகர் . இங்கிருந்து காந்திநகர் இடையே ரோடு இன்றி 3 கி.மீ.. மண்பாதையாக பள்ளம் மேடாக உள்ளதால் வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை உள்ளது. உடல் நலம் பாதித்தவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் உள்ளது. வாகனங்கள் வரமுடியாத நிலையில் கிராமத்தினர் டோலி கட்டி துாக்கி வரும் அவலம் நீடிக்கிறது. அருகில் உள்ள காந்திநகருக்கு அத்தியாவசிய தேவை ,பஸ் வசதிக்கு நடந்து வரும் நிலையே உள்ளது. துவக்கம் முதலே ரோடு அமைக்க இப்பகுதியினர் கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை . அம்பேத்கர் நகரை சேர்ந்த சரவணன் 32, கீழே விழுந்ததில் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட இவரை சிகிச்சைக்காக டோலி கட்டி காந்திநகர் வரை துாக்கி வந்து சரக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர்.இப்பகுதி விவசாயி முருகேசன் கூறுகையில்,'' அம்பேத்கர் நகர் காந்திநகர் 3 கி.மீ.,க்கு ரோடு அமைக்க 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை ரோடு அமைக்கவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி துாக்கி பின் அருகில் உள்ள பழம்புத்துார் கொடைக்கானல் இணைப்பு ரோட்டிற்கு சரக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லும் அவலம் உள்ளது ''என்றார்.