திருப்பரங்குன்றம் விவகாரம்; தி.மு.க., அரசுக்கு கண்டனம்
பழநி: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் நீதிமன்ற உத்தரவின் படி தீபம் ஏற்றாத தி.மு.க., அரசிற்கு கண்டனம் தெரிவித்து ஹிந்து வியாபாரிகள் நல சங்க அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பழநியில் நடந்த இக்கூட்டத்தில், உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். வியாபாரிகள் ஆன்லைன் வியாபாரம், வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் தீபத்துாணில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி கார்த்திகை தீபம் ஏற்றாத தி.மு.க., அரசிற்கு கண்டனம் தெரிவிப்பது, ஹிந்துக்களின் கடைகளை மட்டும் குறி வைத்து தணிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் துன்புறுத்துவது கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ், பொதுச்செயலாளர் முருகானந்தன், செயலாளர் முத்துக்குமார், ஹிந்து வியாபாரிகள் நலச்சங்க மாநிலச் செயலாளர் ஜெகன், கவுரவத் தலைவர் கந்த விலாஸ் பாஸ்கரன், நகரத் தலைவர் வெங்கட்ராஜ், பொதுச்செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.