| ADDED : நவ 09, 2025 06:08 AM
செம்பட்டி: செம்பட்டி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க திட்டம் குறித்து வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நிலக்கோட்டை ஒன்றியம் பச்சைமலையான்கோட்டை ஊராட்சி பராமரிப்பில் செம்பட்டி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. திண்டுக்கல் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, தேனி, திருப்பூர் உட்பட வெளிமாவட்ட போக்குவரத்தின் மைய பகுதியாக அமைந்துள்ளது. எந் நேரமும் கணிசமான அளவில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். ஊராட்சியின் அதிகபட்ச வருவாய் ஆதாரமாக இங்குள்ள 30க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. வாகனங்கள், மக்கள் போக்குவரத்து அதிகரிப்பிற்கு ஏற்ப பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் லலித்ஆதித்யாநீலம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். பஸ் ஸ்டாண்டின் பரப்பளவு, கட்டுமான திட்டம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள், பஸ்கள் நிறுத்தும் தொடர்பாக குறித்து கேட்டறிந்தனர். திட்ட இயக்குனர் திலகவதி, பி.டி.ஓ., குமாரவேலு, உதவி பொறியாளர்கள் டெல்லிராஜா, செல்வக்குமார் உடன் இருந்தனர்.