காத்திருக்கும் பேராபத்தால் பரிதவிக்கும் விவசாயிகள்
வடமதுரை : வடமதுரை மொட்டணம்பட்டி கிராமத்தில் தனியார் நிலத்தில் முறையான அனுமதியின்றி 50 அடி ஆழத்திற்கு மண் வெட்டி அகற்றப்பட்டதால் அருகில் செல்லும் ஓடை கரை சேதமடைந்து காட்டாற்று நீர் விளை நிலங்கள், கிணறுகள், கோயில், வீடுகளை நாசமாக்கும் ஆபத்து காத்திருக்கிறது.வேலாயுதம்பாளையம் பண்ண மலை தொடரில் பெய்யும் மழை நீர் ஊற்றாக்கரை கண்மாயில் சேகரமாகிறது. இங்கு மறுகால் பாயும் நீருடன் சுற்றுப்பகுதி கிராமங்களில் பெய்யும் நீரும் சேர்ந்து ஓடையாக பயணித்து மொட்டணம்பட்டி குளத்திற்கு சென்றடைந்து, இதன் மறுகால் நீர் சித்துார் பெரியகுளத்தை சேர்கிறது. இந்த ஓடையிலும் அருகிலுள்ள விளை நிலங்களிலும் சில நுாறு ஆண்டுகளாக நீர் வரத்தால் மணல் உருவாகி மண்ணில் புதையுண்டு கிடந்தன. இதை எடுக்கும் நோக்கில் மொட்டணம்பட்டி கிராமத்திற்கு முன்னதாக இருக்கும் 3.5 ஏக்கர் தனியார் நிலத்தில் சிலர் சில ஆண்டுகளாக மணல், மண் அள்ளி வருகின்றனர். இதனால் அங்கு 50 அடி ஆழத்திற்கு சிறு குளம் போல் பள்ளங்கள் உருவாகி உள்ளன. தனியார் நிலத்தில் மணல், மண் அள்ளப்பட்ட நிலையில் தற்போது ஓடை கரையை நெருக்கியும் மண் எடுத்துள்ளனர். இதனால் சமீபத்தில் பெய்த மழையில் ஏற்பட்ட நீர் வரத்தால் ஓடை கரைபகுதி பலமிழந்து சரிந்தது. இந்த நீர் அங்குள்ள மண் வெட்டப்பட்ட மெகா ஆழ தனியார் நிலத்தில் இருக்கும் பள்ளங்களில் தேங்கி நிற்கின்றன. ஓடையில் அதிகளவில் நீர் வரத்து ஏற்படும்போது ஓடையின் போக்கு உடைந்த கரை பகுதி வழியே 100 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாய்வதை தடுக்க முடியாது. அங்குள்ள 10 கிணறுகள், கோயில்கள், வீடுகள் பாதிப்படையும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் வேதனையுடனும், பரிதவிப்புடனும் உள்ளனர். பள்ளங்களை மூட வேண்டும்
-பி.பலராமன், அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி: இப்பகுதியில் அனைவரும் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் நம்பி உள்ளனர். கனமழையில் ஓடையில் பெருக்கெடுக்கும் மழை நீர் இனி அதன் பாதையில் செல்லாமல் உடைப்பட்ட கரை வழியே விளை நிலங்களில் புகும் நிலையே தற்போது உள்ளது. இங்குள்ள ஓடையில் வளர்ந்திருந்த ஏராளமான மரங்களை ஓடை பாதையை சுத்தம் செய்வதாக கூறி முறைகேடாக ஆளும் கட்சியினர் வெட்டி விற்றனர். ஆனால் மேற்கொண்டு பணி ஏதும் செய்யவில்லை. விளை நிலங்களுக்குள் ஓடை நீர் புகுவதை தடுக்க கரை பலமாக்க வேண்டும். இதோடு அதிக ஆழ பள்ளங்களை மூட வேண்டும். -பாதிப்படைய செய்யும்
பி.ஜோதிமணி, விவசாயி: தனியார் இடம் என சட்டத்திற்கு புறம்பாக ஆளும் கட்சியினரின் ஆதரவுடன் இங்குள்ள 3.5 ஏக்கர் நிலத்தில் பெரும்பகுதி மெகா ஆழ ஆபத்தான பள்ளங்களாக மாறி உள்ளன. இதையொட்டிய ஓடை கரையிலும் மண் வெட்டியதால் தற்போது கரையும் சிதைந்து கிடக்கிறது. கால நிலை பருவ மாற்றத்தால் இனிமேல் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் அதிகளவு மழைபொழிவு ஏற்படுவது சாதாரணமாக நடக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ள இந்நிலையில் பண்ண மலையில் கன மழை பெய்தால் இங்குள்ள உடைந்த ஓடை கரை வழியே நீர் வெளியேறி 100 ஏக்கர் விளை நிலங்களை மிகுந்த பாதிப்படைய செய்யும். -காத்திருக்கு ஆபத்து
சி.பாப்புச்சாமி, விவசாயி: தனியார் நிலம் என்றாலும் மண், மணல் எடுக்க சட்டப்படி அனுமதி பெற வேண்டும். இதற்கும் ஆழ அளவு வரைமுறைகள் உள்ளன. ஆனால் இங்கு இந்த நடைமுறைகள் ஏதுவும் பின்பற்றப்படவில்லை. மண் அள்ள தோட்டப்பட்ட சீரற்ற பள்ளங்களுக்குள் தேங்கும் நீரால் சேரும், சகதியுமாக மாறி கிடக்கிறது. இந்த பள்ளங்களுக்குள் அறியாமையில் இறங்கும் சிறுவர்கள் , ஆட்கள், கால்நடைகள் என அனைவருக்குமே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.சேதமடைந்த கரையை பலப்படுத்தி ஓடையில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.