தொடரும் மேகமூட்டத்தால் ஏமாற்றத்தில் விவசாயிகள்
ஆத்தூர்: ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதியில் குறிப்பிடத்தக்க மழையின்றி, தொடரும் மேகமூட்டத்தால் விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக, ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ளது. பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில், இதன் அருகில் கூடுதல் தண்ணீர் தேக்கும் வகையில், மற்றொரு சிறு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மட்டுமின்றி வழித்தடத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கும் தண்ணீர் ஆதாரமாக அமைந்துள்ளது. சில வாரங்களாக நிலவும் அதிக வெப்பத்தால், நீராதாரங்களில் நீர் மட்டம் வெகுவாக குறையத் தொடங்கியது. சுற்றுப்பகுதியில் உள்ள பாசன கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. சமீப நாட்களாக பகலில் அதிக வெப்பமும், மாலையில் மேக மூட்டமும் நீடிக்கிறது. செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி பகுதிகளில் பகலில் அனல் காற்று வீசுகிறது. காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு மழை கிராமங்களான ஆடலூர், பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை இல்லை. வெறுமனே மேகமூட்டம் மட்டும் நீடிக்கும் நிலையில், இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.