ஒட்டன்சத்திரத்தில் நிரம்பாத நீர்நிலைகளால் விவசாயிகள் கவலை
ஒட்டன்சத்திரம் : போதிய மழை பெய்யாததால் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அணைகள் நிரம்பாமலும்,குளங்கள் நீர்வரத்தின்றியும் காணப்படுகிறது. இதை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து ஏற்படுவதுண்டு. கனமழை பெய்யும் போது காற்றாற்று வெள்ளம் குளங்களுக்கு வந்து சேரும். இதே காலகட்டத்தில் பரப்பலாறு அணை நிரம்பி மறுகால் செல்லும்போது அந்த உபரி நீரும் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்யாததால் காற்றாற்று வெள்ளம் குளங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படவில்லை. பரப்பலாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டவில்லை. இதனால் விருப்பாச்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம், ஜவ்வாது பட்டி பெரியகுளம், முத்து சமுத்திரம்குளம், முத்து பூபாலசமுத்திரம் கண்மாய், சிறு சிறு குளங்கள் நீர்வரத்தின்றி காணப்படுகிறது. இதேபோல் கொத்தையம் நல்லதங்காள் அணைக்கட்டு, இடையகோட்டை நங்கஞ்சியாறு நீர்த்தேக்கம் ஆகியவையும் நீர்வரத்து இன்றி காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பினால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். தற்போது நீர்நிலைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.