ஸ்டாலின் டில்லி பயணத்திற்கு காரணம் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் சந்தேகம்
திண்டுக்கல்:'முதல்வர் ஸ்டாலின் நிடி ஆயோக் கூட்டத்திற்கு டில்லி செல்கிறாரா அல்லது டாஸ்மாக் வழக்கிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர்களை சந்திக்கப்போகிறாரா என்பது சந்தேகமாக உள்ளது'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது :அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தி.மு.க., செய்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்து மருத்துவப்படிப்பில் சேர உதவியது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,அரசு. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., செய்தது போல் பொய்யான பிரசாரம் செய்கிறார். தி.மு.க., அமைச்சர்கள் மீதான ரத்து செய்யப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2026 தேர்தலில் ஆட்சி மாற்றத்தை மக்கள் நிச்சயம் கொண்டு வருவர். பழனிசாமி முதல்வர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.மின் கட்டண உயர்வு வீடுகளுக்கு இல்லை என்றாலும் தொழிற்சாலைக்கான மின் கட்டணம் உயர்ந்தால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது எனக் கூறி 2024 நிடி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை என வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் இப்போது செல்கிறார்.அவர் அக்கூட்டத்திற்கு டில்லி செல்கிறாரா , டாஸ்மாக் வழக்கிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர்களை சந்திக்கப் போகிறாரா என சந்தேகமாக உள்ளது. இதைத்தான் பொதுச்செயலர் பழனிசாமியும் தெரிவித்திருக்கிறார்.ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் சூழ்நிலை மாறும். தி.மு.க., தனித்து நின்றால் அ.தி.மு.க.,வும் தனித்து நிற்கும்.ஆனால் தி.மு.க., கூட்டணி சேரும்போது அக்கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என அத்தனை கட்சிகளும் அ.தி.மு.க., வில் சேருகின்றன. இது காலத்தின் கட்டாயம் என்றார்.