தொடர் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட நால்வர் கைது:ரூ.3 லட்சம் மதிப்பிலான 16 அலைபேசிகள் மீட்பு
திண்டுக்கல்:திண்டுக்கல் நகரில் 4 நாட்களாக இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்வோரை குறி வைத்து அலைபேசி திருட்டில் ஈடுபட்ட நால்வரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான 16 செல்போன்களை மீட்டுள்ளனர். திண்டுக்கல் நகரில் நவ.26 முதல் தொடர்ந்து இரவு நேரத்தில் தனியாக அலைபேசியில் பேசிக்கொண்டு நடந்து செல்வோரை குறி வைத்து கும்பல் ஒன்று டூவீலரில் வேகமாக வந்து அலைபேசியை பறித்து வழிப்பறியில் ஈடுபட்டனர். இதேபோல் திண்டுக்கல் நகர், தெற்கு,வடக்கு, தாடிக்கொம்பு உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 12 பேரிடம் இதேபோல் அலைபேசியை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து அவர்களைப் பிடிக்க எஸ்.பி., பிரதிப், தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். தனிப்படை எஸ்.எஸ்.ஐ., வீரபாண்டி தலைமையிலான போலீசார் நகரில் உள்ள எல்லா பகுதிகளிலும் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கினர். இரவு நேரமாக இருப்பதால் குற்றவாளிகளை அடையாளம் காண திணறல் ஏற்படும் நிலை இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் நத்தம் செங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் பதுங்கியிருந்த நத்தம் மணக்காட்டூர் தர்மராஜ்23, நத்தம் குட்டுப்பட்டி பாண்டித்துரை 18, செங்குறிச்சி ஆலம்பட்டியை சேர்ந்த வசந்தவேல் 18, மாரிமுத்து18 ஆகிய நால்வரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 16 அலைபேசிகள் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.