டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே நான்கு கடைகளில் திருட்டு
வேடசந்தூர்: வேடசந்துார் டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே அடுத்தடுத்து நான்கு கடைகளில் நடந்த திருட்டு குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வேடசந்தூர் கொல்லம்பட்டறை ரோட்டில் டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளது. இதன் நுழைவாயில் எதிரே துணி 'அயன்' கடை நடத்தி வருபவர் கொசவபட்டி காளியம்மாள் 65. இவரும், இவரது மூன்று மகன்களும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவர்களது கடையின் மேற்கூரை வழியாக நுழைந்த மர்ம நபர் இரண்டு 'அயன்' பாக்ஸ்களை திருடிச்சென்று விட்டார். இதே லைனில் டீக்கடை நடத்தி வருபவர் வேடசந்தூர் ஜெயமணி 40. இவரது கடையில் பொங்கலுக்கு மறுநாள் இரவு நுழைந்த மர்ம நபர் ரூ.10 ஆயிரம் மதிப்பு பொருட்கள், பேங்க் பாஸ்புக் உட்பட ஆவணங்களை திருடிச்சென்றார். இதுபோல் அருகில் உள்ள ஜூஸ் கடை, கறிக்கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிச்சென்றனர். டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே மெயின் ரோட்டில் சி.சி.டிவி., கேமராக்கள் உள்ள நிலையில் இந்த திருட்டு சம்பவங்களில் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.