கொடைக்கானலுக்கு அழகு சேர்க்கும் குப்பைத்தொட்டிகள்
மாற்றி யோசித்த தன்னார்வ அமைப்புகள்கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் காட்டுமாடு வடிவிலான குப்பை தொட்டிகளை சுற்றுலா நகரில் வைத்து அழகுப்படுத்தி உள்ளது தன்னார்வ அமைப்பு.கொடைக்கானலில் நகராட்சி சார்பில் ஆங்காங்கே வழக்கமான குப்பை தொட்டிகளை அமைத்து நாள்தோறும் பராமரிப்பு செய்து வருகின்றனர். சில நேரங்களில் குப்பை நிறைந்து வழியும் நிலையில் அவை முகம் சுளிப்பதாக உள்ளது. இதற்கு மாற்றாக கொடைக்கானல் ரோட்டரி கிளப், தன்னார்வ அமைப்புகள் ஒன்று கூடி காட்டுமாடு வடிவிலான குப்பை தொட்டிகளை நகரில் வைத்துள்ளது. இவ்வமைப்பு சுற்றுலா நகரில் மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது. வருகை தரும் சுற்றுலா பயணிகளும் இதை ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு குப்பையை முறையாக தொட்டிகளில் போடும் நிலை உள்ளது.நகரின் ஏரிச்சாலை,அப்பர் லேக் வியூ, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நான்கு இடங்களில் தன்னார்வ அமைப்பினர் இவ்வகையிலான குப்பை தொட்டிகளை அமைத்துள்ளனர். இதன் மூலம் நாள்தோறும் ஒரு தொட்டியில் 100 கிலோ குப்பை சேகரமாகின்றன. இவற்றை நகராட்சி அகற்றி ஒத்துழைப்பு அளிக்கிறது. இத்தகைய வடிவமைப்பிலான குப்பை தொட்டிகள் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொடைக்கானல் ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் கூறுகையில்,''ரோட்டரி சங்கம்,பிற தன்னார்வ அமைப்புகள் இணைந்து காட்டுமாடு வடிவிலான குப்பைத் தொட்டியை வடிவமைத்துள்ளோம். இவ்வகையிலான குப்பைத் தொட்டி ஒன்று அமைப்பதற்கு ரூ. 80 ஆயிரம் செலவாகிறது. மேலும் பைபர் மெட்டீரியல் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதால் இவை எளிதில் சேதமடையாது. 100 கிலோ குப்பை வரை சேகரிக்கலாம். நகரில் இவ்வகையிலான குப்பைத் தொட்டிகளை விரிவாக்கம் செய்ய தன்னார்வ அமைப்புகள் முடிவு செய்துள்ளோம். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது'' என்றார்.