அரசு பஸ் ஜப்தி
திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதுாரை சேர்ந்தவர் காரத்திக்பாண்டி 35, தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மீரா 32. தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2024 ஜன.,29ல் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்ற மீரா மீது அரசு பஸ் மோதியதில் பலியானார். வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில் விபத்து இழப்பீடு கேட்டு மீரா குடும்பத்தினர் திண்டுக்கல் சிறப்பு சப்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சோமசுந்தரம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.33.87 லட்சத்தை போக்குவரத்துக் கழகம் இழப்பீடாக வழங்க வேண்டுமென 2025 ஜூலை 14ல் உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. இதையடுத்து நிறைவேற்றுதல் மனுவை விசாரித்த நீதிபதி, அரசு பஸ்சை ஜப்தி செய்யவும், 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். நீதிமன்ற அலுவலர் பொன்மணி தலைமையிலான ஊழியர்கள் நேற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் நின்றிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.