| ADDED : ஜூன் 25, 2025 01:41 AM
திண்டுக்கல்:''முருகன் எங்களுடன் இருக்கும்போது முருகனை வைத்து அவர்கள் (பா.ஜ.,) எப்படி அரசியல் செய்ய முடியும்,'' என, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை பயிற்சி முகாமில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியும், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு குறைவான நிதியும் ஒதுக்கியதும் சரியில்லை. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. அம்மொழி இருப்பது யாருக்கும் தெரியாது. இலக்கணம், இலக்கியம் இல்லை. அழிந்து வரும் மொழிக்கு நிதி எதற்கு ஒதுக்கிறார்கள் என அவர்களை தான் கேட்க வேண்டும்.மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா., குறித்த வீடியோ வெளியிட்டது தவறு. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களே இந்தக் கூட்டத்தில் அவர்கள் இடம் பெற்றிருக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர். ஈ.வெ.ரா., குறித்த விமர்சனத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது முற்றிலும் தவறு. அவர்களுக்கு சரியான பாடத்தை வருங்காலத்தில் மக்கள் கற்பிப்பார்கள்.முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் முருகன் எங்களுடன் இருக்கிறார். அவர்கள் (பா.ஜ.,) எப்படி அரசியல் செய்ய முடியும் என்றார்.