உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலையடிவார கிராமங்களில் அனுமதியற்ற மின்வேலிகள் அதிகரிப்பு! தொடரும் மனித, வன விலங்கு பலியை கட்டுப்படுத்துங்க

மலையடிவார கிராமங்களில் அனுமதியற்ற மின்வேலிகள் அதிகரிப்பு! தொடரும் மனித, வன விலங்கு பலியை கட்டுப்படுத்துங்க

கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி நடமாட்டத்திற்காக அனுமதியற்ற மின்வேலி தாராளமாகி விட்டது. இதனால் மனித, வன விலங்கு பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. இவை பருவகாலம், சாகுபடி சீசனுக்கு ஏற்ப தங்களின் வழித்தடங்கள், வாழிடங்களை மாற்றி முகாமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. மலைப்பகுதி, அடிவார கிராமங்களில் பரவலாக தென்னை, வாழை, சவ்சவ், காபி, எலுமிச்சை, மிளகு உள்ளிட்ட சாகுபடி நடக்கிறது. மலைப்பகுதி மட்டுமின்றி அடிவார கிராமங்களிலும் வன உயிரினங்களின் நடமாட்டம் சில ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்துள்ளது. யானைகள், காட்டு பன்றிகளால், சாகுபடி சேதப்படுத்தப்படும் அவல நிலை தொடர்கிறது. அகழி, சோலார் மின் வேலி போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் பெயரளவில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். யானைகளால் சாகுபடி, வீடுகளை சேதப்படுத்தல், விவசாயிகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன. சில ஆண்டுகளாக கன்னிவாடி வனச்சரக பகுதியில் வன ஊழியர் உட்பட பலர் உயிர்பலியான சம்பவங்கள் ஆண்டுதோறும் தொடர்ந்தது. யானை நடமாட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் வழக்கம் போல் வனத்துறை தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. யானைகளின் நிரந்தர வழித்தட பகுதியை கண்காணித்து அவற்றை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் திட்டமிடலை வனத்துறை கண்டுகொள்ளவில்லை. பட்டாசு வெடிப்பது, புகைமூட்டம் எழுப்புதல் போன்ற நடவடிக்கைகள் ஆவணப்படுத்த மட்டுமே பயன்படுகின்றன. இது யானைகளை கட்டுப்படுத்துவதில் பலனளிப்பதாக இல்லை. சில வாரங்களாக மீண்டும் மலையடிவார கிராமங்களில் யானைகள், காட்டுப்பன்றி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதற்காக பெரும்பாலான விவசாயிகள் அனுமதியற்ற மின்வேலி அமைக்க துவங்கி விட்டனர். இதையடுத்து வன உயிரினங்கள் மட்டுமின்றி மனித உயிர்களும் பலியாகி வருகின்றன. இவற்றை கண்காணித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ......... ---- ஏட்டளவு நடவடிக்கைகள் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதியில் சமீபத்தில் கூட அடுத்தடுத்து மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த அவ்வப்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்து புகை மூட்ட பணிகளை ஆவணப்படுத்துகின்றனர். வன உயிரினங்களை கட்டுப்படுத்தும் வகையில் அகழியும், சோலார் மின் வேலியும் அதிகரிக்க வேண்டும். அனுமதியற்ற மின்வேலி பிரச்னையில் ஆத்துார், எஸ்.பாறைப்பட்டி, கன்னிவாடி, முத்துராம்பட்டி பகுதியில் இதுவரை 5 பேர் இறந்தனர். மின்வாரிய ஆய்வு செய்வதில்லை. சம்பந்தப்பட்ட இணைப்பு துண்டிப்பு, அபராத நடவடிக்கைகளும் இல்லை. வனத்துறை பெயரளவில் நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கு மின்வாரிய, வனத்துறை இணைந்த கண்காணிப்பு, அபராதம், கைது நடவடிக்கைகள் மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும். சந்துரு ,ரெட்டியார்சத்திரம் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி, கன்னிவாடி. ............... -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sesh
அக் 22, 2025 10:35

it may look strange but no other go, fixing private electric fences, other wise we cannot control animal attack. when govt or forest dept cannot provide permanaut fool proof tem to protect from animal attack it is our right to fixing the fence. if any person or animal is tresspassing that is their problem. if any animal attacked and kiiled somebody is the same tem can provide enough compensation.


சமீபத்திய செய்தி