விளக்குகள் இல்லாத டூவீலர்களால் விபத்துக்கள் அதிகரிப்பு: வாகன விதிகளை மதிக்காத நிலையால் விபரீதம்
நாட்டில் அதிகளவில் டூவீலர்கள் புழக்கத்தில் வராத காலத்தில் போலீசார் சைக்கிள்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க விளக்கு , பின்புற எதிரொளிப்பான் இல்லாமல் ரோடுகளில் செல்வோரை பிடித்து அபராதம் விதிப்பர். இப்படி எல்லாம் விபத்துகளை தவிர்க்க கண்டிப்பு காட்டப்பட்ட நிலையில் தற்போது ஏராளமான சைக்கிள்களில் பின்புற எதிரொளிப்பான், டூவீலர்களில் பின்புற விளக்குகள் எரியாமல் ரோட்டில் சாதாரணமாக இயக்கப்படுகின்றன. இத்தகைய வாகனங்கள் இரவு நேரங்களில் ரோட்டில் செல்லும் போது பின்னால் வேகத்தில் வரும் மற்ற மோட்டார் வாகனங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் குறித் து ஏதுவும் தெரியாமல் விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. டூவீலரை இயக்குவோர் பின்புறமாக வரும் வாகனங்களை கண்காணித்து தனது டூவீலரை இயக்க உதவும் கண்ணாடிகளும் இல்லாமல் இயக்கப்படுகின்றன. இத்தகைய வாகனங்கள் எளிதாக விபத்தில் சிக்குவதற்கும், மற்றவர்களை விபத்தில் சிக்க வைக்கவும் செய்கின்றன. வாகனங்களில் பதிவு எண் குறித்த விபர பலகைகள் இருப்பதில்லை. சிலர் போலி எண் பலகையுடன் வலம் வருகின்றனர். இதுபோன்ற டூவீலர்களில் வருவோர் அதிகளவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பல்வேறு நாட்டின் நலன் கருதி தற்போது புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு தனித்துவமான நம்பர் பலகைகள் வழங்கப்படுகின்றன. இதையும் சிலர் கழற்றி வைத்துவிட்டு தங்கள் இஷ்டத்திற்கு எண்களை மிகவும் சிறிதாக, பெரியதாக மாற்றி ஸ்டிக்கர் முறையில் ஒட்டி வைத்துள்ளனர். அரசின் வாகன விதிமுறைகளை மீறியப்படி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.