உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அதிகரிப்பு அரசு வேலை வாங்கி தருவதாக நடக்கும் மோசடிகள்குறுக்கு வழியை தேடுவதால் அரங்கேறும் சம்பவங்கள்

அதிகரிப்பு அரசு வேலை வாங்கி தருவதாக நடக்கும் மோசடிகள்குறுக்கு வழியை தேடுவதால் அரங்கேறும் சம்பவங்கள்

திண்டுக்கல்,டிச.10 -திண்டுக்கல் மாவட்டத்தில் குறுக்கு வழியில் அரசு வேலைக்காக ரூ.லட்சக்கணக்கில் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள்,அரசு அதிகாரிகள்,பட்டதாரி வாலிபர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்கள் வாழ்வை தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மாவட்டத்தில் ஆத்துார்,கன்னிவாடி,பழநி,கொடைக்கானல்,ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் அரசு போட்டித்தேர்வு மையங்களில் ஏராளமான இளைஞர்கள் தங்கள் கனவுகளுக்காக போராடுகின்றனர். இருந்தாலம் அரசு வேலை என்பது கனவுகளாக தோன்றுகிறது. இதுபோன்ற கனவுகளை நிஜமாக்க ஒருசிலர் மட்டுமே அதற்கான முயற்சியில் முழுமையாக இறங்குகின்றனர். சிலர் குறுக்கு வழியில் எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விடலாமா என பகல் கனவு காண்கின்றனர். இதுபோன்ற பகல் கனவு காண்பவர்களை தேடிப்பிடித்து அரசு வேலை தருவதாக ஆசை வார்த்த கூறி ரூ.லட்சக்கணக்கில் மோசடி செய்வதற்காகவே கும்பல்கள் பல சுற்றித்திரிகின்றன . படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள்,பெண்களை குறி வைத்து மோசடி செய்யும் நோக்கத்தில் இனிக்க இனிக்க பேசி சிலர் தங்கள் வலையில் விழ வைக்கின்றனர். தங்களுக்கு அரசாங்கத்தில் பெரிய செல்வாக்குகள் உள்ளது. அதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த அரசு துறையில் வேலை வாங்கி விடலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.லட்சக்கணக்கில் கறக்கின்றனர். பணத்தை பெற்ற சில நாட்களிலே தலைமறைவாகி விடுகின்றனர். பணத்தை திரும்ப பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் ஏமாந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனை நாடுகின்றனர். இதிலும் ஒருசிலர் பணம் போனால் போகட்டும் என மவுனமாக கடந்து செல்கின்றனர்.இதுபோன்ற வழக்குகள் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் குவிந்த வண்ணமாக உள்ளது. படித்த இளைஞர்கள் நேர்மையாக படித்து அரசு வேலைக்கு செல்வதை விட்டு குறுக்கு வழியில் பணம் கொடுத்து சேர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தால் எப்படி வாழ்வில் முன்னேற முடியும் என போலீசாரே கேள்வி எழுப்புகின்றனர். இதிலும் அரசு அதிகாரிகளாக பணியாற்றுபவர்களே தங்கள் பிள்ளைகளுக்கு பணத்தை கொடுத்து வேலையை வாங்கலாம் என இதுபோன்ற மோசடிகளில் சிக்கி தவிக்கின்றனர். இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமலிருப்பதால் தான் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி படித்தால் தான் அரசு வேலைக்கு செல்ல முடியும். பணம் கொடுத்தால் செல்ல முடியாது என்பதை மக்கள் உணர வைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.........விழிப்புணர்வு தேவைஅரசு வேலைக்கு ஆசை படும் இளைஞர்கள்,பெண்கள் அதற்கு ஏற்ற தேர்வுகளுக்காக படித்து முயற்சி செய்ய வேண்டும். மோசடி கும்பல்கள் ஏதாவது கவர்ச்சிகரமான ஆசை வார்த்தைகளை கூறி பணம் பறிக்க தான் பார்ப்பார்கள். படித்த இளைஞர்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்குவது தான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. எத்தனையோ தடைகளை தாண்டி படிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் கூட கடினமான உழைப்பால் அரசு போட்டித்தேர்வில் வெற்றி பெற்று தங்கள் வாழ்வை மாற்றுகின்றனர். அரசு சார்பில் அதற்கென எத்தனையோ போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அரசு வேலை தருவதாக நடக்கும் மோசடிகளில் மக்கள் சிக்குவது அதிகரித்துள்ளது. போதிய விழிப்புணர்வு தேவை. அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.கார்த்திக்வினோத்,பா.ஜ.,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர்,திண்டுக்கல்...................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை