உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு,தனியார் மருத்துவமனைகளில் மாதம் 2 முறை ஆய்வு

அரசு,தனியார் மருத்துவமனைகளில் மாதம் 2 முறை ஆய்வு

திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளை மாதம் 2 முறை ஆய்வு செய்கிறோம். முறைகேடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கிறோம் ,''என திண்டுக்கல் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பூமிநாதன் தெரிவித்தார்.

போலி டாக்டர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை உள்ளதா...

போலி டாக்டர்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இல்லை. அதற்கென தனியாக குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். பொது மக்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கிறோம். படிக்காமல் மருத்துவம் பார்ப்பவர்களும் நிறுத்திவிட்டனர்.

மருத்துவமனைகள் முறையாக செயல்படுகிறதா...

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி,கொடைக்கானல்,கன்னிவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 12 அரசு மருத்துவமனைகளும்,885 அரசு மருத்துவமனைகளும் செயல்பாட்டில் உள்ளது. ஸ்கேனிங் சென்டர்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மாதம் 2 முறை எல்லா மருத்துவமனைகளிலும் ஆய்வுக்கு செல்கிறோம். அங்குள்ள ஆவணங்கள் முறையாக உள்ளதா. நோயாளிகளுக்கு ஏதேனும் தேவைகள் உள்ளதா என ஆய்வு செய்வோம். அதில் எங்களுக்கு தெரியும் குறைகளை பூர்த்தி செய்வோம்.

காலாவதி மருந்துகளை பயன்படுத்துகிறார்களா...

அரசு மருத்துவமனைகளை பொருத்தமட்டில் மருந்து,மாத்திரைகள் குறிப்பிட்ட நாட்கள் வரை இருப்புகள் இருக்கும். அதையும் தேதியை ஆய்வு செய்து தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பபடுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தேவையான அளவு மட்டும் தான் மருந்து,மாத்திரைகளை வாங்குகின்றனர். இதனால் காலாவதியாக வாய்ப்புகள் குறைவு. அதையும் முறையாக கண்காணித்து வருகிறோம்.

புதிதாக தொற்று நோய்கள் பரவுகிறதா...

மாவட்டத்தில் இதுவரை புதிதாக தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் இல்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பழநி,கொடைக்கானல்,கன்னிவாடி,நிலக்கோட்டை,வத்தலக்குண்டு உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் யாரும் நோயாளிகள் அனுமதியாகவில்லை.

அரசு மருத்துவமனைகள் தரமாக உள்ளதா...

மாவட்டத்தில் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கட்டடங்களும் தரமாக உள்ளது. நோயாளிகளின் தேவைகளும் அடிக்கடி பூர்த்தி செய்யப்படுகிறது. ஆய்வு செய்யும் போது பொது மக்களிடமும் குறைகளை கேட்போம்.

ரத்ததான முகாம்கள் நடக்கிறதா...

அடிக்கடி ரத்ததான முகாம்கள் நடத்தி ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ரத்த வங்கிகள் மூலம் கிடைக்கும் ரத்தங்களை சேமித்து தேவைப்படும் மக்களுக்கு வழங்குகிறோம். பொது மக்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி