திண்டுக்கல்லில் ஐ.பி.எல்., ரசிகர் பூங்கா இன்றும் நாளையும் போட்டி ஓளிபரப்பு
திண்டுக்கல்: 'இன்றும், நாளையும் நடக்கும் ஐ.பி.எல்.,போட்டி திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல்., ரசிகர் பூங்காவில் ஓளிபரப்பபடுகிறது .இதை ரசிகர்கள் இலவசமாக காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக 'திண்டுக்கல் கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் சித்தாந்த், இந்திய கிரிக்கெட் சங்க பிரதிநிதி ஆனந்த் டட்டார் கூறினர் .திண்டுக்கல்லில் அவர்கள் கூறியதாவது: 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க முடியாத கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ரசிகர் பூங்காக்களை ஐ.பி.எல். நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வகையில் திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி பழைய கரூர் ரோட்டில் உள்ள பிரசித்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் ஐ.பி.எல். ரசிகர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகளை நேரில் காண முடியாத ரசிகர்களுக்கு டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திரை மூலம் ஒளிபரப்ப படுகிறது. பூங்காவில் உணவு, குளிர்பான கடைகள், சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் என பல்வேறு சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. ராட்சத டிஜிட்டல் திரையில் இன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இடையிலான போட்டி, பஞ்சாப் கிங்க்ஸ் அணி -ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையிலான போட்டியும் ஒளிபரப்பப்படும். இதேபோல் நாளை (ஏப்.6)) ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி- - குஜராத் டைட்டன்ஸ் அணி இடையிலான போட்டி ஒளிபரப்பப்பட உள்ளது. போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்வையிட்டு ரசிக்கலாம். போட்டியை காண வரும் ரசிகர்களில் 'லக்கி டிரா' முறையில் தேர்வு செய்யப்படும் ரசிகர்களுக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் கையொப்பமிட்ட 'டி-சர்ட்' வழங்கப்படும் என்றனர்.