| ADDED : மார் 30, 2025 03:08 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி எல்லை மீறி பறக்கவிடப்படும் ெஹலிகேம் எனும் ட்ரோன் கேமராக்களின் பயன்பாடுகளை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் அதிக வியூஸ் ,லைக்குகள் பெறுவதற்காக இளைஞர்கள் அதிதொழில்நுட்ப கேமராக்கள் மூலம் காட்சிகளை படம் பிடித்து வருகின்றனர். இதில் சமீப காலமாக பருந்து பார்வையில் காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக ெஹலிகேம் எனும் ட்ரோன் கேமராக்கின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. கல்யாணம், காதுகுத்து தொடங்கி கோயில் திருவிழாக்கள் வரை ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படாத இடமே இல்லை. இயற்கை காட்சிகள், வனப்பகுதிகள், அணைகள் போன்வற்றை உயரத்தில் இருந்தபடியே காட்சிப்படுத்தும் இந்த ட்ரோன் கேமராக்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.பழமையான கோயில்கள், திண்டுக்கல் மலைக்கோட்டை, கொடைக்கானல், சிறுமலை, பழநி கோயில் என அதிகமானோர் வந்து செல்லும் பகுதியாக இருக்கின்ற திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதற்கென அனுமதி உள்ளிட்ட எந்த வித கட்டுப்பாடுகளும் இது வரை இல்லை. கண்ட இடத்தில் கேமராக்கள் கண்ணிற்கு எட்டாத துாரத்தில் உள்ள பல விஷயங்களை காட்சிப்படுத்தப்படுகிறது.குறிப்பாக பழநி மலையை சுற்றிலும் அதிகளவில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கோயில் கோபுர கலசங்கள் நெருங்கும் வகையில் ட்ரோன்களை பறக்க விடுகின்றனர். கொடைக்கானலுக்கு அதிகளவில் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் இடங்களிலும் இதுபோல ட்ரோன் கேமராக்களின் பயன்பாடுகளும் அதிகரித்துள்ளது. இவர்கள் எங்கிருந்து இயக்குகின்றனர் என்பதும் எவருக்கும் தெரியவில்லை. அதே போல்தான் தான் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நடக்கிறது.இதனால் அசம்பாவிதம் ஏற்படும் சூழலும் உள்ளது. இதுபோன்ற ட்ரோன் கேமராக்களை இயக்க உரிய அனுமதி பெற வேண்டுமென்ற விதியை உருவாக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், போலீசார் உரிய வழிகாட்டலை உருவாக்க வேண்டும்.