| ADDED : பிப் 19, 2024 05:51 AM
சாணார்பட்டி, : சாணார்பட்டி தவசிமடையில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர். காளைகள் முட்டியதில் 55 பேர் காயமடைந்தனர். 1 காளை காயமடைந்து இறந்தது.சாணார்பட்டி தவசிமடையில் புனித அந்தோனியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. திண்டுக்கல்,தேனி,மதுரை, திருப்பூர்,விருதுநகர், திருச்சி,சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டது. 720 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு 680 காளைகள் போட்டியில் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 257 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 8.35 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு சைக்கிள், அண்டா, பானை, டிவி, பீரோ உள்ளிட்ட பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். காளை முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 55 பேர் காயமடைந்தனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு காளைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது.