ராணுவத்தினருக்கு மன வலிமை, அருள் கிடைக்க ஆறுபடை வீடுகளில் ஜனசேனா தரிசனம்
பழநி:ராணுவ வீரர்களுக்கு மன வலிமை, அருள் கிடைக்க ஆந்திர மாநில ஜனசேனா கட்சியினர் காக்கிநாடா எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வராவ் தலைமையில் தமிழகத்திலுள்ள ஆறுபடை வீடுகளில் தரிசனம் செய்கின்றனர். நேற்று இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.ஆந்திரா மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி சார்பில் ஆறுபடை வீடுகளை தரிசனம் செய்து ராணுவ வீரர்களுக்கு ஆன்மிக பலன் கிடைக்க வழிபாடு நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி காக்கிநாடா எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வராவ் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினர் பழநி முருகன் கோயிலில் நேற்று தரிசனம் செய்தனர்.பின் வெங்கடேஷ்வரராவ் கூறியதாவது : பாஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசின் ராணுவ வலிமை உலகிற்கு தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் எல்லைப்பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மனவலிமையும், தெய்வ அருளும் அவசியம். தேசமே முதலானது. அரசியல் அதற்கு அப்பாற்பட்டது. இதை கருதி ஜனசேனா கட்சி சார்பில் முருகன் கோயில்களில் வழிபாடு நடத்தப்படுகிறது என்றார்.