மழையால் பாதிக்கப்பட்ட கார்த்திகை தீப அகல் விளக்கு உற்பத்தி
ஒட்டன்சத்திரம் : தொடர் மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கார்த்திகை தீபஅகல் விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.ஒட்டன்சத்திரம் ஸ்ரீரங்க கவுண்டன்புதுார், காளாஞ்சிப்பட்டி, சாமியார் புதுார் பகுதிகளில் கார்த்திகை தீபத்திற்கான அகல் விளக்கு அதிக அளவில் தயாரிக்கப்படுவது வழக்கம். புயல் மழை காரணமாக இப்பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் வெயில் இல்லை. இதன் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட களிமண் அகல் விளக்குகளை உலர்த்த முடியாமல் மண்பானை தொழிலாளர்கள் தவிக்கின்றனர். இதனால் 2023 ஐ காட்டிலும் இந்தாண்டு பாதி அளவிற்கு மட்டுமே உற்பத்தி நடந்துள்ளது.ஸ்ரீரங்ககவுண்டன்புதுாரை சேர்ந்த விளக்கு உற்பத்தி தொழிலாளி லட்சுமி கூறியதாவது:ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட அகல் விளக்குகளை தயாரிப்போம். இந்தாண்டு மழை தொடர்ந்து பெய்வதால் 5 ஆயிரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. குளத்திலிருந்து மண் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளது. இலவசமாக மண்ணெடுப்பதற்கு கையெழுத்து வாங்குவதற்கு தாலுகா அலுவலகம், ஊராட்சி அலுவலகம் என அலைக்கழிப்பு செய்கின்றனர். இதனால் குளத்து மண்ணை கொண்டு வருவதற்குள் பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது என்றார்.