நத்தம் அருகே ஆண்கள் பங்கேற்ற கருப்பண்ணசுவாமி கோயில் விழா 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு விருந்து
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமலைக்கேணி காயங்கொடை கருப்பண்ணசுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட திருவிழாவில் 100 க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி பலி கொடுக்கப்பட்டு கொட்டும் மழையில் விடிய விடிய அசைவ விருந்து நடந்தது. கம்பிளியம்பட்டியை சுற்றியுள்ள 18 பட்டி ஊர் மக்கள் சேர்த்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை காயங்கொடை கருப்பண்ணசுவாமிக்கு புரட்டாசி நிறைவுக்கு பிறகு விழா நடக்கும். இதையொட்டி நடக்கும் அசைவ விருந்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு கம்பிளியம்பட்டி கிராம தெய்வத்திற்கு பழம், தேங்காய் வைத்து சிறப்பு பூஜை செய்து வாண வெடிகள் வெடிக்கப்பட்டன. பிறகு 100க்கும் மேற்பட்ட ஆடுகளை ஊர்வலமாக பக்தர்கள் அழைத்து வந்தனர். கொட்டும் மழையிலும் விடிய விடிய ஆடுகளை பலியிட்டு நேற்று காலை அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர். கருப்பண்ணசுவாமிக்கு சிறப்பு அபிேஷக, பூஜைகள் நடந்தன.