உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடவடிக்கையில் தொய்வு ; ரோடுகளில் புகையை கக்கி செல்லும் வாகனங்கள்; மூச்சு திணறலால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

நடவடிக்கையில் தொய்வு ; ரோடுகளில் புகையை கக்கி செல்லும் வாகனங்கள்; மூச்சு திணறலால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

நத்தம் : திண்டுக்கல் மாவட்டத்தில் நடவடிக்கை தொய்வால் புகை கக்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்கிறது. போக்குவரத்து நெரிசலுக்கு இடையே இதுபோன்ற வாகனங்களால், புகைமண்டலம் உருவாக பொது மக்கள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள மாவட்டத்தில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முக்கிய ரோடுகள், எப்போதும் போக்குவரத்து நெருக்கடியிலே மூழ்கிக் கிடக்கின்றன. நெருக்கடி, சத்தம் இடையே பயணம் என்பது சிரமமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் புகை கட்டுப்பாடு இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு சக வாகன ஓட்டிகள், பொதுமக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. டூவீலர், ஆட்டோ, லாரி, தனியார் பள்ளி,கல்லூரி பஸ்கள் என மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் முறையான புகை பரிசோதனை மேற்கொள்ளப்படாமலே இயக்கப்படுகின்றன. பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களில் இருந்து அதிகளவு புகை வெளியாகிறது. நெரிசலில் சிக்கும்போது இதுபோன்ற புகை வாகனங்களால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்கிறது. சகவாகன ஓட்டிகள், நடந்துசெல்லும் பாதசாரிகள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகின்றனர். தொடர்ந்து நச்சுத்தன்மை வாய்ந்த புகையைசுவாசிக்க வேண்டியுள்ளதால் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு,சுவாசக்கோளாறு நோய்களுக்கு உள்ளாகும் அவல நிலை ஏற்படுகிறது.வாகன ஓட்டிகளிடம் லைசென்ஸ், ஆர்.சி., புக் உள்ளிட்டஆவணங்களை ஆய்வுசெய்யும் போக்குவரத்து போலீசார் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் அதிக புகை கக்கும் வாகனங்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ......... சுற்று சூழலுக்கு மாசு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நுாற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் வந்து செல்கின்றன. வாகனங்கள் பெருக்கத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும் அவை கக்கும் புகையால் சுற்று சூழல் மாசு ஏற்படுகிறது. வாகனங்களின் ஆயுட்காலத்தை கடந்து இயக்கப்படும் போதோ குறிப்பிட்ட கால இடை வெளியில் சர்வீஸ் செய்யாமல் இயக்கப்படும்போதோ அவற்றில் இருந்து வெளியேறும் கரும்புகை காற்றை மாசுப்படுத்துகிறது. இது மனிதர்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கிறது. சுவாசப் பிரச்னையையும் உருவாக்கும். வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மக்களிடம் தெளிவான புரிதலை உருவாக்கவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ய வேண்டும்.ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் முன்னோட்ட அடிப்படையில் கார்பன் உமிழ்வை கண்காணிக்கும் முறையை செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து துறை அதிகாரிகளும் புகை பரிசோதனையை தொய்வின்றி ஆய்வு செய்ய வேண்டும். ஆர்.ராமராசு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர், ராமராஜபுரம், நத்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ